கடற்படை விளையாட்டு கழகத்தின் அபாரமான விளையாட்டினால் இவ்வருட ரக்பி லீகின் தொடர்ச்சியான 11ஆவது தோல்வியை சந்திக்க CH & FC விளையாட்டு கழகத்திற்கு நேரிட்டது. கடந்த வாரம் கண்டி விளையாட்டு கழகத்துடன் நடந்த போட்டியில் கடற்படை அணி தோல்வியை தழுவிய போதிலும் தாம் கிண்ணத்துக்காக போராடுவதை நிறுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம்  CH & FC அணியை 81-23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லொங்டன் ப்லேஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் 13 ட்ரைகளை கடற்படை அணி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திலின வீரசிங்கவின் உதை மூலம் ஆரம்பமான இப்போட்டியில் CH & FC அணியின் பந்துடனான முதல் தொடுகையே நொக் ஒன் ஆக அமைந்தது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கடற்படை அணி ஸ்கரம் இல் இருந்து பந்தை சானக சந்திமாலிற்கு கைமாற்ற அவர் கடற்படை அணிக்காக முதல் ட்ரையை பெற்றுக்கொடுத்தார். இதற்கான உதையும் திலின வீரசிங்கவினால் வெற்றிகரமாக பெற்றுக்கொடுக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களுக்குள் கடற்படை அணியின் ’பிளாங்கெர்’ நிவங்க பிரசாத் மற்றுமொரு ட்ரையை பெற்றுக்கொடுக்க இதற்கான உதையும் திலின வீரசிங்கவினால் வெற்றிகரமாக உதையப்பட்டது. (CH & FC அணி 00 – 14 கடற்படை அணி)

CH & FC அணி ஆரம்பத்தில் இருந்தே போட்டிக்குள் சரியாக நுழையவில்லையாயினும் விஷ்வ டெனித்தினால் பெனால்டி மூலம்   பெற்றுக்கொடுக்கப்பட்ட புள்ளிகளுடன் CH & FC அணி போட்டிக்குள் மெல்ல காலடி எடுத்து வைத்தது. எனினும் மைதானத்தின் அடுத்த பக்கம் சிறப்பான ஒரு ரோலிங் மோலின் விளைவாக துலஞ்சன விஜேசிங்க கடற்படை அணிக்கான 3ஆவது ட்ரையை பெற்றுக்கொடுக்க திலின வீரசிங்க தன் உதை மூலம் மேலும் இரு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (CH & FC 03 – 21 கடற்படை அணி)

Photos: CH&FC v Navy SC – Dialog Rugby League 2016/17 | #Match 43

Photos of the CH&FC v Navy SC – Dialog Rugby League 2016/17 | #Match 43

விஷ்வ டெனித்தின் மற்றுமோர் சிறந்த உதையினால் CH & FC அணிக்கு பெனால்டி மூலம் மேலும் 3 புள்ளிகள் கிடைத்தன. ஆனால் கடற்படை அணியின் ட்ரை மழையை மாத்திரம் CH & FC அணியினரால் நிறுத்த முடியவில்லை. கடற்படை அணியின் சென்டர் நிலையில் விளையாடும் லஹிரு ஹேரத் ட்ரை ஒன்றை வைக்க அதனை தொடர்ந்து சுபுன் டில்ஷானின் வேகத்தாலும் விவேகத்தாலும் மற்றுமோர் ட்ரையை கடற்படை அணி பெற்றுக்கொண்டது. திலின வீரசிங்கவுக்கு ஹேரத்தின் ட்ரைக்கான உதையை புள்ளிகளாக மாற்ற முடிந்த போதிலும் டில்ஷானின் ட்ரைக்கான உதையை புள்ளிகளாக மாற்ற முடியவில்லை. (CH & FC 06 – 33 கடற்படை அணி)  

CH & FC அணியின் ஒரேயொரு ட்ரையை ஆகாஷ் இத்தவள பெற்றுக்கொடுத்தார். போட்டியின் முதல் பாதி நிறைவு பெற நெருங்கும் தருவாயில் சானக சந்திமாலும் துலஞ்சன விஜேசிங்கவும் தலா ஒவ்வோர் ட்ரை வீதம் கடற்படை அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். திலின வீரசிங்கவினால் ஒரு உதையை மாத்திரமே புள்ளிகளாக மாற்ற முடிந்தது. CH & FC அணிக்காக வழங்கப்பட்ட பெனால்டி உதையுடன் போட்டியின் விறுவிறுப்பான முதல் பாதி நிறைவு பெற்றது.

முதற் பாதி : CH & FC விளையாட்டு கழகம் 14 – 45 கடற்படை விளையாட்டு கழகம்

போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பித்து சொற்ப நேரத்தில் கடற்படை அணியின் 8ஆம் இலக்க வீரர் சதுர டில்ஷான் செய்த தவறொன்று காரணமாக மைதானத்திலிருந்து நடுவரால் வெளியேற்றப்பட்டார். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய டினேத் CH & FC அணிக்காக மேலும் மூன்று புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். இதனைத்தொடர்ந்து தன் மூன்றாவது ட்ரையை சானாக சந்திமால் கடற்படை அணிக்காக பெற்றுக்கொடுக்க, உதையின் மூலம் மேலதிக 2 புள்ளிகளை திலின வீரசிங்க பெற்றுக்கொடுத்தார். CH & FC அணி விட்ட ’நொக் ஒன்னை’ தமக்கு சாதகமாக பயன்படுத்திய கடற்படை அணி தம் விங் நிலை வீரர் தினுச சதுரங்கவின் மின்னல் ஓட்டத்தினால் மற்றுமொரு ட்ரையை பெற்றுக்கொண்டது. தொடர்ச்சியாக தினுச தன் இரண்டாவது ட்ரையையும் அணிக்காக பெற்றுக்கொடுக்க கடற்படை அணி 64-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

CH & FC அணியில் மிகவும் சிறப்பாக விளையாடிய புல் பாக் நிலை வீரர் மேலும் இரு பெனால்டிகளை புள்ளிகளாக மாற்றியதன் மூலம் தம் அணியின் புள்ளிகளை 23 ஆக அதிகரித்தார். அதீஷ வீரதுங்கவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேறியமையால், அடுத்த 10 நிமிடங்களுக்கு கடற்படை அணி இன்னுமொரு வீரர் இல்லாத நிலையில் விளையாட நேரிட்டது. எனினும் கடற்படை அணி கொடுக்கும் அழுத்தத்தை CH & FC அணியினரால் நிறுத்த முடியவில்லை. வெறும் உதைகள் மூலம் புள்ளிகளை தம் அணிக்காக பெற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த திலின வீரசிங்க தனது முதல் ட்ரையை கடற்படை அணிக்காக பெற்றுக்கொடுத்தார். இது கடற்படை அணிக்கு வெற்றியின் வாசத்தை உணரச்செய்தது. (CH & FC அணி 23 – 69 கடற்படை அணி)

போட்டியின் இறுதிக்கட்டங்களில் தினுச சதுரங்க மேலும் இரு ட்ரைகளை வைத்து கடற்படை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இவரின் இறுதி ட்ரை துலஞ்சன விஜேசிங்க 40 மீட்டர் ஓடி கொண்டுவரப்பட்ட பந்தின் மூலமே வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: CH & FC விளையாட்டு கழகம் 23 – 81 கடற்படை விளையாட்டு கழகம்

Thepapare.com போட்டியின் சிறந்த வீரர்- தினுச சதுரங்க (கடற்படை விளையாட்டு கழகம்)

போட்டியின் பின் தினுசவுடனான கலந்துரையாடலின் போது அவர் கூறியதாவது,

“இன்று எமது அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடியது குறித்து நான் அவர்களை பெரிதும் பாராட்டுகின்றேன். மேலும் கடைசியாக நடந்த சில போட்டிகளில் உபாதை காரணமாக என்னால் விளையாட முடியாது போனாலும் இப்போட்டியில் நான் சிறப்பாக விளையாடி 4 ட்ரைகளை அணிக்காக பெற்றுக் கொடுத்ததை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.”

போட்டியின் புள்ளி விபரங்கள்

CH & FC விளையாட்டுக் கழகம் 23

ட்ரை – ஆகாஷ் இட்டவள

பெனால்டி – விஷ்வா டெனித் (06)

கடற்படை விளையாட்டுக் கழகம் 81
ட்ரை – தினுச சதுரங்க(04), சாணக சந்திமால்(03), துலாஞ்சன விஜேசிங்க(02), நிவங்க பிரசாத், லஹிரு ஹேரத், சுபுன் டில்ஷான், திலின வீரசிங்க

கொன்வெர்சன் – திலின வீரசிங்க(08)