கார்லோஸ் பிரெத்வெய்ட்டுக்கு ஐ.சி.சி இனால் அபராதம்

112

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் கார்லோஸ் பிரெத்வெயிட்டுக்கு ஐ.சி.சி இனால் போட்டி ஊதியத்தில் 15 சதவீத குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தற்சமயம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. தொடரின் 80 சதவீதமான போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், லீக் தொடரின் 34 ஆவது போட்டி வியாழக்கிழமை (27) இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் மென்செஸ்டரில் நடைபெற்றது. 

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் மேற்கிந்திய தீவுகள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…

இப்போட்டியில் இந்திய அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நடப்பு உலகக்கிண்ண தொடரில் இதுவரையில் ஒரு தோல்வியையும் சந்திக்காத அணியாக மாறியுள்ளது. மேலும் மேற்கிந்திய தீவுகளின் இத்தோல்வி மூலம் அவ்வணி அரையிறுதி வாய்ப்பை இழந்த மூன்றாவது அணியாக மாறியுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணி துடுப்பெடுத்தாடும் போது மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக 42 ஆவது ஓவரை கார்லோஸ் பிரெத்வெயிட் வீசினார். இவ்ஓவரின் இறுதிப்பந்தை ஹார்த்திக் பாண்டியா எதிர்கொண்டார். வீசப்பட்ட பந்து வைட் பந்தாக நடுவரினால் தீர்ப்பளிக்கப்பட்டது.

மீண்டும் ஓவரின் இறுதி பந்து வீசப்பட சர்ச்சைக்கு மத்தியில் அது வைட் பந்தாக மீண்டும் நடுவரினால் தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு பந்துவீச்சாளரான கார்லோஸ் பிரெத்வெயிட் நடுவருடன் முரண்பட்டார். போட்டி நிறைவடைந்ததன் பின்னர் பிரெத்வெயிட்டின் நடத்தை தொடர்பில் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட கிறிஸ் போர்ட்டிடம் நடுவரினால் புகார் செய்யப்பட்டது.

இதன் காரணமாக கார்லோஸ் பிரெத்வெயிட்டுக்கு ஐ.சி.சி இன் 2.8 ஆம் இலக்க ஒழுக்க விதிமுறை மீறலின்படி நடுவரினுடைய தீர்ப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதால் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராத தொகையாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனை போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவீதமும், இரண்டு தகுதி இழப்பீட்டு புள்ளிகளுமாகும்.

ஐ.சி.சி இன் புதிய ஒருநாள் தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில்…

இவர் மீதான குறித்த குற்றச்சாட்டானது போட்டியின் கள நடுவர்களான ரிச்சார்ட் கெட்டில்ப்ரோஹ், ரிச்சார்ட் லில்லிங்வேர்த் மற்றும் மூன்றாம் நடுவர் மிட்சல் கொஹ் மற்றும் மேலதிக நடுவரான அலீம் தார் ஆகியோரினால் சுட்டிக்காட்டப்பட்டு, போட்டியின் மத்தியஸ்தரான கிறிஸ் போர்ட் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதமும், தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றத்தை கார்லோஸ் பிரெத்வெயிட் ஏற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக எந்தவிதமான மேலதிக விசாரணைகளுக்கும் அவர் ஆஜராக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 14 ஆம் திகதி சௌத்தம்டெனில் நடைபெற்ற போட்டியில் நடுவருடன் முரண்பட்ட காரணத்தினால் ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் கார்லோஸ் பிரெத்வெயிட்டுக்கு விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<