இலங்கை அணிக்கு T20 உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பு சாத்தியமா???

158

T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இலங்கை தென்னாபிரிக்க அணிக்கு எதிராக த்ரில்லர் தோல்வியினை சந்தித்த போதும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு, தொடரின் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பானது இன்னும் காணப்படுகின்றது.

>>தென்னாபிரிக்காவிடம் போராடி தோல்வியடைந்த இலங்கை!

அந்தவகையில் T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றுக்கு செல்ல, சுபர் 12 சுற்றில் இலங்கை ஆடும் போட்டிகளும், ஏனைய அணிகள் ஆடும் போட்டிகளும் இலங்கை அணிக்கு சாதகமாக அமைய வேண்டும்.

இலங்கை இனி செய்ய வேண்டிய முக்கிய விடயமாக T20 உலகக் கிண்ணத்தில் தமக்கு எஞ்சியிருக்கும் போட்டிகளில் தொடரின் வெற்றியாளர் அணியாக மாற எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து மற்றும் நடப்புச் சம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள் என இரண்டு அணிகளையும் வீழ்த்த வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் இலங்கை அணிக்கு 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் கிடைக்கும்.

>>T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவிற்கு முதல் தோல்வி

நிலை I – இலங்கை அணி 6 புள்ளிகளை பெறும் சந்தர்ப்பத்தில், இலங்கை அணியின் குழுவில் உள்ள ஏனைய அணிகளின் போட்டிகளும் இலங்கைக்கு சாதகமாக இடம்பெற வேண்டும். அந்தவகையில் இலங்கையின் குழுவில் உள்ள பங்களாதேஷ் தமக்கு எஞ்சியிருக்கும் போட்டிகளில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்த வேண்டும். அதோடு மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடவிருக்கும் போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். அது தவிர இங்கிலாந்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தம்முடைய போட்டியில் வெற்றியினை பதிவு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்டவாறு நடக்கும் எனில், இலங்கை ஓட்ட வித்தியாச விகிதம் எதுவுமின்றி (Net Run Rate) அடுத்த சுற்றுக்காக தெரிவாகும்.

நிலை II – இலங்கை தமக்கிருக்கும் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, மேற்குறித்த போட்டிகளில் அவுஸ்திரேலியா அல்லது தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் ஒரு வெற்றியினைப் பதிவு செய்யும் போது, இலங்கை அணி T20 உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாக சிறந்த  ஓட்ட வித்தியாச விகிதத்தினை (Net Run Rate) கொண்டிருக்க வேண்டும்.

இப்போதைய நிலைமைகளை கருத்திற் கொள்ளும் போது இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியினை விட சற்று பின்தங்கிய ஓட்ட வித்தியாச விகிதத்தினையும் அவுஸ்திரேலிய அணியினை சிறந்த ஓட்ட வித்தியாச விகிதத்தினையும் கொண்டிருக்கின்றது. எனவே, எவ்விதமான முடிவுகளும் சாத்தியமானவையாகவே காணப்படுகின்றன.

ஆனால் இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் இங்கிலாந்துடன் தோல்வியுறும் பட்சத்தில், இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதோடு, தென்னாபிரிக்கா – இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் தமது அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் போதும், இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் போகும் சூழ்நிலை காணப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<