ஸ்மித் தலைவராக பொறுப்பேற்ற முதல் போட்டியில் ராஜஸ்தானுக்கு வெற்றி

164
Image Courtesy - IPL Official Page

ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கெதிராக நடைபெற்ற 36ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. போட்டித் தடைக்குப் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவராக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ராஜஸ்தானுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

ஐ.பி.எல் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஓப் (Play off) சுற்றுக்கு இன்னும் 20 போட்டிகள் மட்டும் உள்ளதால் ஒவ்வொரு அணிகளும் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறுவதில் மும்முரம் காட்டி வருகிறது.

2015 உலகக் கிண்ண ஞாபகத்தை மீட்டெடுக்கும் சங்காவின் துடுப்பாட்ட சாதனை

குமார் சங்கக்கார, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறுக்கப்படாததும்,

இந்த நிலையில், இன்று (20) மாலை நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி எதிர்கொண்டது. எனினும், போட்டி ஆரம்பமாவதற்கு முன் ராஜஸ்தான் அணி நிர்வாகம், அந்த அணியின் தலைவராகச் செயற்பட்டு வந்த அஜிங்கியா ரஹானேவை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஒருவருட போட்டித் தடைக்குப் பின்னர் முதற்தடவையாக ஐ.பி.எல் போட்டிகளில் மீண்டும் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய ஸ்மித், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் உலகக் கிண்ண அணியிலும் இடம்பிடித்தார்.

இது இவ்வாறிருக்க, ஸ்மித்தின் போட்டித்தடை முடிந்த பின் ராஜஸ்தான் அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் தலைவராகச் செயற்பட்டு அவ்வணிக்கு மூன்றாவது வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.

மும்பை அணி சார்பாக, குயிண்டன் டி கொக் 47 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, யாதவ் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சார்பாக. ஸ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஸ்ருவர்ட் பின்னி, ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் உனத்கட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில், 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ரியான் பரக் ஆகியோரின் இணைப்பாட்டத்தின் உதவியுடன் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அத்துடன், அந்த அணியின் வெற்றிக்காக ஸ்மித் 48 பந்துகளில் 59 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று இம்முறை ஐ.பி.எல் தொடரில் தனது 2ஆவது அரைச் சதத்தையும் பதிவுசெய்தார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2017ஆம் ஆண்டு செயற்பட்டார். ஆனால், அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார். இதனால், அவருக்கு ஓர் ஆண்டு விளையாட அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தடை விதித்தது. இதனால், கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் இருந்தும் ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்வாகம் நீக்கியது. அவருக்கு பதிலாக ரஹானே தலைவராக நியமிக்கப்பட்டார்

ஸ்மித் மீதான தடை காலம் முடிவு நெருங்கியதும், தற்போது நடந்துவரும் 12ஆவது ஐ.பி.எல் தொடரில் விளையாட ஐ.பி.எல் நிர்வாகம் அனுமதித்திருந்தது. இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டு தற்காலிகமாக தலைவராகச் செயற்பட்ட ரஹானே ராஜஸ்தான் அணியை பிளே ஓப் சுற்றுவரை கொண்டு சென்றார். அதனால், இந்த ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் அணிக்குள் இடம்பெற்ற நிலையிலும் ரஹானேவே தலைவராக தொடர ராஜஸ்தான் நிர்வாகம் அனுமதியளித்தது.

ஆனால், ராஜஸ்தான் அணியின் செயற்பாடுகள் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு ஐ.பி.எல் போட்டியில் இருக்கவில்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 2 வெற்றிகள், 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி சந்தித்து வருகிறது. இதனால் அணிக்கு மாற்றம் தேவை என்பதை உணர்ந்த நிர்வாகம் அதிரடியாக ரஹானாவை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை இன்றைய போட்டியில் நியமித்திருந்தது.

இது குறித்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டிருந்த அறிக்கையில், ஐ.பி.எல் தொடரை மிகவும் உற்சாகமாக எதிர்கொள்ள நினைக்கிறோம். ராஜஸ்தான் அணிக்கு ஏற்கனவே ஸ்டீவ் ஸ்மித் தவைராக இருந்தவர் ஆதலால், தற்போது மீண்டும் அணிக்கு தலைவராக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ரஹானே அணியில் வழக்கம் போல் தொடர்வார். புள்ளிப்பட்டியலில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு ஏதுவாக சிறிய அளவில் அணியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஹானே தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கருத்து வெளியிடுகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக ரஹானே மிகச்சிறப்பாக ராஜஸ்தான் அணியை வழிநடத்தியுள்ளார். இருந்த போதிலும் அணி நிர்வாகம் சில மாற்றத்தை விரும்பியுள்ளது, அதன் காரணமாகவே நான் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டேன். முந்தைய தொடர்களில் நான் தலைவராக சில போட்டிகளில் மிகச்சிறப்பாக செயற்பட்டு அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளேன். எனவே, அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்துள்ளது என்று நினைக்கிறேன். நானும் என்னால் முடிந்த அளவிற்கு ராஜஸ்தான் அணியை சிறப்பாக வழிநடத்துவேன். அடுத்தடுத்த போட்டிகள் அனைத்தும் ராஜஸ்தான் அணிக்கு மிக முக்கியமானவது மற்றும் சவாலானது என்றார்.

இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியின்

இதேவேளை, அடுத்துவரும் போட்டிகள் அனைத்துக்கும் ஸ்மித் தவைராக செயற்படுவார் என ராஜஸ்தான் அணி அறிவித்திருந்தாலும், இம்முறை உலகக் கிண்ண குழாத்தில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள ஸ்மித், நியூசிலாந்து அணியுடனான பயிற்சிப் போட்களில் பங்கேற்பதற்காக இம்மாத இறுதியுடன் மீண்டும் அவுஸ்திரேலியா திரும்பவுள்ளார். எனவே வெறும் 5 போட்டிகளுக்காக ஸ்மித் தலைவராகச் செயற்படவுள்ளார்.

எனவே ஐ.பி.எல் புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்றாலும் பிளே ஓப் சுற்றுக்குத் தகுதிபெறுவது மிகவும் கடினம்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க