சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் ஜேசன் ரோய்

IPL 2021

182
Sunrisers Hyderabad

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் மிச்சல் மார்ஷ், தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மிச்சல் மார்ஷ் நீண்ட நாட்களுக்கு கொவிட்-19 உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்குள் தன்னால் இருந்து விளையாட முடியாது என்ற காரணத்தால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக IPL நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளார். 

>> டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராகும் ரிஷப் பண்ட்

IPL நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மிச்சல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முறை தொடரில் விளையாடமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

நடந்துமுடிந்த IPL வீரர்கள் ஏலத்தில் ஜேசன் ரோய் விலைபோகாத நிலையில், தற்போது மாற்று வீரராக மீண்டும் IPL தொடரில் இடம்பிடித்துள்ளார். அத்துடன், அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட 2 கோடி இந்திய ரூபாய் அவருக்கான தொகையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேசன் ரோய் கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்காக முதன் முறையாக IPL அறிமுகத்தை பெற்றதுடன், 2018ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கெபிடல்ஸ்) அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர், கடந்த ஆண்டு உடற்தகுதி தொடர்பான சிக்கல்களால் IPL தொடரில் விளையாடவில்லை.

மிச்சல் மார்ஷ் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இணைக்கப்பட்டிருந்த போதும், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மாத்திரமே விளையாடியிருந்தார். இந்தப்போட்டியின் போது, மிச்சல் மார்ஷ் உபாதைக்குள்ளாகியதுடன், தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து வெளியேறியிருந்தார். இதன் பின்னர், ஜேசன் ஹோல்டர் அவருக்கு பதிலாக இணைக்கப்பட்டு விளையாடியிருந்தார்.

எனினும், IPL வீரர்கள் தக்கவைப்பில் மிச்சல் மார்ஷ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தக்கவைக்கப்பட்டிருந்த போதும், தற்போது அவர் விலகியுள்ளமை அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<