மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் லாரா

181

மேற்கிந்திய தீவுகள் ஆடவர் கிரிக்கெட் அணியின் செயல்திறன் ஆலோசகராக (Performance Mentor) அந்த அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, அந்நாட்டு ஆடவர் சர்வதேச கிரிக்கெட் அணி மற்றும் கிரிக்கெட் சபை அகடமியுடன் இணைந்து லாரா பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் உள்ள பயிற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மற்றும் வீரர்களுக்கு தந்திரோபாய ஆலோசனைகளை வழங்குவது பிரையன் லாராவின் பிரதான பணியாக அமைந்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான மூலோபாய திட்டங்களை சக வீரரும், அந்நாட்டு கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் இயக்குனருமான ஜிம்மி அடம்ஸுடன் இணைந்து வகுப்பதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் பிரையன் லாரா

பிரையன் லாராவின் புதிய நியமனம் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று ஜிம்மி அடம்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘எமது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் எமது கிரிக்கெட் வளர்ச்சிக்கு பிரையன் லாரா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதை நான் எதிர்பார்க்கிறேன். எமது வீரர்களுக்கு ஆதரவாக பிரையன் லாராவை ஈடுபடுத்த முடிந்ததில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்’ என தெரிவித்தார்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு குறித்து பிரையன் லாரா கருத்து வெளியிடுகையில், ‘நான் ஏற்கனவே வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளதால் அவர்களின் மன நிலையை மேம்படுத்தவும், அவர்களின் தந்திரோபாயங்கள் மேலும் வெற்றிபெற செய்வதற்கும்s என்னால் உதவ முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் சுற்றுடன் வெளியேறியது. எவ்வாறாயினும், மேற்கிந்திய தீவுகள் அணியின் உலகக் கிண்ண பெறுபேறுகள் தொடர்பில் ஆராய அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் பிரையன் லாராவும் ஒரு உறுப்பினராக இருந்தார்.

இதனிடையே, அடுத்த மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்தில் பிரையன் லாரா மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணைந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<