100 பந்துகள் கிரிக்கெட்டுக்கு பயிற்சியாளராகிறார் மஹேல

5301

நூறு பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டிக்கு இங்கிலாந்து சௌதன் பிரேவ் அணிக்கு பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான ஜயவர்தன பயிற்சியாளராக அண்மைக் காலத்தில் சிறப்பாக செயற்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் இரு முறை மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வெல்ல பயிற்சி அளித்த அவர், இங்கிலாந்து அணிக்கு குறுகிய காலம் ஆலோசகராக செயற்பட்டதோடு, உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியுடன் பணியாற்றுவதை அண்மையில் நிராகரித்திருந்தார்.  

ஐ.சி.சி இன் புதிய ஒருநாள் தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில்….

இவ்வாறான ஒரு நிலையிலே சௌதம்டனை தளமாகக் கொண்ட சௌதன் பிரேவ் அணிக்கு உதவிப் பயிற்சியாளராக ஷேன் பொண்டும் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனினும் இந்த இரு ஒப்பந்தங்களும் இன்னும் உறுதியாகவில்லை. இது பற்றி பேச்சுவார்த்தை முன்னேற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.  

100 பந்துகள் கொண்ட இந்தப் போட்டித் தொடருக்கு பல அணிகளும் தமது பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி உதவியாளர்களை தேர்வு செய்துள்ளன. இதில் பெர்மிங்ஹாம் பொனிக்ஸ் அணிக்கு அன்ட்ரூ மக்டொனால்ட் இந்த வார ஆரம்பத்தில் நிமிக்கப்பட்டிருந்தார். 

லண்டனின் லோட்ஸை தளமாகக் கொண்ட லண்டன் ஸ்பிரிட் அணிக்கு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேபோன்று, டிரன்ட் ரொக்கெட் அணிக்கு ஸ்டீபன் பிளமிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாக தெரியவருகிறது. இதில் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் 65,000 பௌண்ட்கள் சம்பளம் நிர்ணயிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இது இலங்கை மதிப்பில் 150 இலட்சம் ரூபா அளவாகும்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் முதல் முறையாக நடத்தப்படவிருக்கும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை 2020 ஜூலை மாதத்தில் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. அந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<