அசைக்க முடியா பி.எம்.எஸ் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது

232
redbull campus cricket

ரெட் புல் தனியார் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் சேஜிஸ் பல்கலைக்கழகத்தை, பி.எம்.எஸ் பல்கலைக்கழக அணி ஆகஸ்ட் 10ஆம் திகதி எதிர்கொண்டது. தர்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பி.எம்.எஸ் அணியானது 6 விக்கட்டுகளால் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சேஜிஸ் அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சேஜிஸ் அணியானது நியமிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

சேஜிஸ் அணிக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த அனுக்  டி அல்விஸ் 33 ஓட்டங்களைப் பெற்று சேஜிஸ் அணிக்கு பலமாக அமைந்தார்.

தமித் ப்ரியதர்ஷன் 26 ஓட்டங்களைக் குவிக்க, தலைவர் ஷெஹான் பெர்னாண்டோ 19 ஓட்டங்களைப் பெற்று சேஜிஸ் அணி 163 ஓட்டங்களைக் குவிக்க உதவினார்.

இலங்கை கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இளம் வீரர் தசுன் ஷானக பி.எம்.எஸ் அணி சார்பாக 4 ஓவர்கள் பந்து வீசி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பி.எம்.எஸ் அணியினருக்கு 163 ஓட்டங்கள் எனும் இலக்கு இலகுவானதாகவே காணப்பட்டது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.எம்.எஸ் அணியானது 16.4 ஓவர்களில் 167 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

பி.எம்.எஸ் அணி சார்பாக இலங்கை கிரிக்கெட்  அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இன்னுமொரு இளம் வீரரான ஷெஹான் ஜயசூரிய முன்னைய போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தது போன்றே இப்போட்டியிலும் ஆட்டமிழக்காமல்  38 பந்துகளில் 58 ஓட்டங்களை விளாசி பி.எம்.எஸ் அணி இலகுவாக வெற்றிபெற உதவினார்.

சேஜிஸ் அணியினர் சிறப்பாகப் பந்து வீசி பி.எம்.எஸ் அணியினரைக் கட்டுப்படுத்த முனைந்தாலும் அவர்களால் பி.எம்.எஸ் அணி ஓட்டங்களைக் குவிப்பதைத் தடுக்க முடியவில்லை.சேஜிஸ் அணி சார்பாக சங்கீத் குரே 34 ஓட்டங்களை வாரி வழங்கி 1 விக்கட்டை மாத்திரம் கைப்பற்றினார்.

எந்த ஒரு போட்டியிலும் தோல்வியடையாத பி.எம்.எஸ் அணியானது இறுதிப் போட்டியிலும் 6 விக்கட்டுகளால் வெற்றிபெற்று கிண்ணத்தை லஹிரு திரிமானே மற்றும் பிரண்டன் குருப்புவின் கைகளால் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

சேஜிஸ் அணி – 163/9(20) : அனுக்  டி அல்விஸ் 33 *, தமித் பிரியதர்ஷன் 26,

தசுன்  ஷானக 22/4, ஷெஹான்  ஜயசூரிய 23/1

பி.எம்.எஸ் – 167/4(16.4) : ஷெஹான்  ஜயசூரிய 58 *, ஜனித் விமுக்தி 29

சங்கீத் குரே 34/1, ருவிந்த ஷமீன் 21/1

இலங்கை அணி வீரர் நிரோஷன் திக்வெல்ல வழி நடத்திய பி.எம்.எஸ் கல்லூரி அணியானது செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ரெட் புல்  உலக நாடுகளுக்கிடையிலான பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வெற்றிபெற்ற ஒவ்வொரு அணிகளும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளும். இலங்கை சார்பாக வெற்றியீட்டிய  பி.எம்.எஸ் அணியானது கலந்துகொள்ளவுள்ளது.

இத்துடன் நிறைவுபெற்ற ரெட் புல் தனியார் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியானது இவ்வருடம் பல இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது.

அத்துடன் பல சாதனைகளும் இப்போட்டிகளில் முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எம்.எஸ் அணி 323 ஓட்டங்களை ஒரு இனிங்ஸில் குவித்ததும், 222 ஓட்டங்களால் வெற்றியீட்டியதும் இவ்வருடத்தில் விதைக்கப்பட்ட சாதனைகளாகும்.