வதிவிட முகாமில் பங்கேற்று இலங்கை வரும் பங்களாதேஷ் அணி

116
BCB
Photo - Raton Gomes

ஒக்டோபர் மாதம் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் விளையாடவுள்ள டெஸ்ட் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் பங்களாதேஷ் அணி வதிவிட பயிற்சி முகாம் ஒன்றில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> பாகிஸ்தானுடன் மோதும் இங்கிலாந்து டி20 குழாம் அறிவிப்பு

செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த பயிற்சி முகாம் ஒரு வாரத்திற்கு நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம், இந்த பயிற்சி முகாமுக்கு முன்னதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அதிக எண்ணிக்கையான வீரர்கள் கொண்ட குழாம் ஒன்றினையும் தெரிவு செய்யவுள்ளதாக தெரிவித்திருக்கின்றது.

தெரிவு செய்யப்படவுள்ள வீரர்கள் குழாம் கொவிட்-19 வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கைகளுடன் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுவதோடு அதிலிருந்து பயிற்சிப் போட்டி ஒன்றின் பின்னர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான இறுதி வீரர்கள் குழாம் தெரிவு செய்யப்படவிருக்கின்றது. 

அதேநேரம், தெரிவு செய்யப்படும் குழாமில் உள்ள பங்களாதேஷ் வீரர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க விஷேட பரிசோதனைகளுக்கும் முகம்கொடுப்பார்கள் எனக் கூறப்பட்டிருக்கின்றது. 

”நாங்கள் எல்லோரினதும் (கிரிக்கெட் வீரர்களினதும்) வீடுகளுக்கு செப்டம்பர் 18ஆம் திகதி சென்று கொவிட்-19 வைரஸ் தொற்று பரிசோதனைகளை மேற்கொள்வோம். (இதன் பின்னர்) வீரர்களை செப்டம்பர் 20ஆம் திகதி ஹோட்டல்களுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து செப்டம்பர் 21ஆம் திகதி வீரர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்னும் இலங்கை செல்லவதற்கு சில நாட்கள் முன்னர் இங்கே பயிற்சிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவரான அக்ரம் கான் தெரிவித்திருந்தார். 

>> துடுப்பாட்ட தரவரிசையில் புதிய சாதனை படைத்த பாபர் அஸாம்

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பங்களாதேஷ் மண்ணில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் தடைப்பட்டிருந்தன. அதன் பின்னர் அங்கே கடந்த மாதத்திலேயே வீரர்களுக்கான கிரிக்கெட் பயிற்சிகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமைப் பயிற்சியாளரான ரசல் டொமின்கோ, செப்டம்பர் 02ஆம் திகதி பங்களாதேஷ் பயணமாகி தனது அணியுடன் பயிற்சிகளுக்காக இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

>> மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க <<