இலங்கை தொடர் குறித்து பங்களாதேஷின் நிலைப்பாடு

65

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) தலைவரான நஷ்முல் ஹசன், எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையுடன் பங்களாதேஷ் விளையாடவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனது நாட்டு அணி பங்கேற்பது பற்றி தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்திருக்கின்றார்.

 இம்ரான் கான் போல அணியினை வழிநடாத்த விரும்பும் பாபர் அசாம்

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் உள்ளடங்குகின்ற குறித்த தொடர், இலங்கையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் ஆபத்து குறைந்து வந்த காரணத்தினால், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி நிசாமுத்தின் சௌத்ரி இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரினை இலங்கையில் நடாத்த நம்பிக்கையுடன் காணப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.  

எனினும், இந்த கருத்திற்கு மாற்றமாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை காத்திருப்பு கொள்கை ஒன்றை பின்பற்றுவதாக அதன் தலைவர் நஷ்முல் ஹசன் குறிப்பிடுவதோடு, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் போன்ற இருதரப்பு தொடர்களில் விளையாட கவனம் செலுத்தாமல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணம் போன்ற ஐ.சி.சி. இன் தொடர்களுக்கே கவனம் செலுத்தும் எனத் தெரிவித்திருக்கின்றார். அதோடு நஷ்முல் ஹசன் கொரோனா வைரஸ் ஆபத்து மீண்டும் உருவாக முடியும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதனால், இலங்கை – பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுவதில் சந்தேகம் நிலவுகின்றது. 

“இன்று பாதுகாப்பாக இருக்கும் இடம் நாளை பாதுகாப்பாக இருக்குமா? என்பது பற்றித் தெரியாது. ஏனெனில், இந்த (கொரோனா) வைரஸ் தாக்கம் மீண்டும் வருகின்றது. எனவே, யாரும் இது எப்போது முடியும் என்பதையோ அல்லது எப்படியான சூழ்நிலை உருவாகும் என்பதையோ கணிக்க முடியாது.”

”(இலங்கை கிரிக்கெட் அணியாகிய), அவர்கள் (டெஸ்ட்) தொடரை (தமது நாட்டில்) நடாத்துவதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இதனை இப்போது அவர்களது விருப்பத்தை வைத்து மாத்திரம் தீர்மானிக்க முடியாது. நாங்கள் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கின்றது. அதில், வீரர்கள் எப்படிப் பயணிப்பார்கள், அவர்கள் எங்கே தங்கவைக்கப்படவுள்ளனர், எங்களுக்கு அவர்களை அனுப்ப அனுமதி கிடைக்குமா? அல்லது இல்லையா?  என பல வினாக்களுக்கு பதில் கிடைக்க வேண்டியிருக்கின்றது.” 

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நடைபெறுமா?

”நாங்கள் ஜூலையிலா அல்லது ஒகஸ்டிலா? என கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் விளையாட ஆரம்பிக்கும் திகதியினை என்னால் வழங்க முடியாது.” 

”நாங்கள் ஐ.சி.சி. என்ன செய்கின்றது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் என்ன செய்கின்றது? மற்ற நாடுகள் என்ன செய்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும். இதுவரையில் எந்த நாடும் கிரிக்கெட் போட்டிகளை மீள விளையாடும் திகதிகள் குறித்து அறிவிக்கவில்லை. நாங்கள் (கிரிக்கெட் விளையாடுவதற்கான திகதிகளை) முதலில் அறிவிக்க வேண்டும் எனக் கூறப்படுவது தவறான யோசனையாகும்.”

இதேவேளை ஐ.சி.சி. ஆனது எதிர்வரும் 28ஆம் திகதி தமது அங்கத்துவர்களிடம் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தி கிரிக்கெட் போட்டிகள் மீள நடைபெறுவது தொடர்பில், தீர்மானங்களை எடுக்கவிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தை பற்றி குறிப்பிடும் நஷ்முல் ஹசன் அது ஐ.சி.சி. இன் தொடர்களை மீள ஆரம்பிப்பது பற்றியதாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கின்றார்.   

”இப்போது (T20) உலகக் கிண்ணத்திற்கான திகதிகளை மாற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், இருதரப்பு தொடர் ஒன்று பற்றி கருத்து வெளியிடுவது கடினம். உண்மையைச் சொல்லப்போனால், ஐ.சி.சி. இன் தொடர்கள் எப்போது நடக்கும் என்பது கூடத் தெரியாது. நாம் இதற்கு ஏற்றாற்போலேயே திட்டங்களை வகுக்க வேண்டும்.” 

இறுதியாக பேசிய நஷ்முல் ஹசன் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தாம் ஏற்கனவே திட்டமிட்ட தொடர்களை, மாற்றங்கள் எதுவும் இன்றி நடாத்த முயற்சிகளை எடுத்துவருவதாகவும் தெரிவித்திருக்கின்றார். 

”இது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்று. ஆனால், இப்போது உள்ள நிலைமை அனைவருக்கும் சமமானது. நாங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கெட் தொடர்களை முடிந்த அளவிற்கு (திட்டமிட்டபடியே) நடாத்த முற்படுகின்றோம்.”

பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் ஒரு புறமிருக்க இலங்கை – இந்தியா அணிகள் இடையில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடர்களும் நடைபெறுவதில் சந்தேகம் நிலவுகின்றது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<