கார் விபத்தில் உயிரிழந்த பிரபல கிரிக்கெட் நடுவர்

148

உலக கிரிக்கெட் அரங்கில் புகழ்பெற்ற நடுவராக வலம்வந்த தென்னாபிரிக்க நாட்டவரான ரூடி கோயர்ட்ஸன் (Rudi Koertzen) கார் விபத்தில் நேற்று (09) உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 73 ஆகும்.

கேப்டவுனில் குடும்பத்துடன் வசித்து வந்த ரூடி, நண்பர்களுடன் கோல்ப் விளையாட சென்றுவிட்டு நேற்று காலை காரில் திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் சென்ற மேலும் 3 பேர் இந்த விபத்தில் பலியானார்கள்.

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில் ரூடி கோயர்ட்ஸன் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளதாக தென்னாபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்னாபிரிக்க ரயில்வே திணைக்களத்துக்காக கிரிக்கெட் விளையாடிய ரூடி கோயர்ட்ஸன், 1981ஆம் ஆண்டு கிரிக்கெட் நடுவரானார். 1992-93 பருவகாலத்தில் இந்திய அணி முதன் தடவையாக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதல் தடவையாக ரூடி கோயர்ட்ஸன் நடுவராக பணியாற்றினார். அப்போது அவருக்கு 43 வயதாகும்.

1997ஆம் ஆண்டு முதல் ICC இன் முழு நேர நடுவராக ரூடி கோயர்ட்ஸன் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் பல்வேறு முக்கியமான சர்வதேச தொடர்களில் நடுவராக செயல்பட்டார்.

குறிப்பாக 3 ICC உலகக் கிண்ணத் தொடர்களில் நடுவராக பணியாற்றினார். அத்துடன் 2003 மற்றும் 2007 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு மூன்றாவது நடுவராகவும் செயல்பட்டார்.

இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நடுவராக செயல்பட்டார். அதன்பின்னர் சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்படுவதிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

2002 முதல் ICC உயர்மட்ட நடுவராக விளங்கிய இவர் கள நடுவராக சுமார் 331 சர்வதேச போட்டிகளில் செயல்பட்டுள்ளார். அத்துடன் மூன்றாவது நடுவராக 66 போட்டிகளில் இருந்துள்ளார். மேலும் 200 ஒருநாள் மற்றும் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் கள நடுவராக செயல்பட்ட முதல் நபர் ரூடி கோயர்ட்ஸன் தான்.

108 டெஸ்ட் போட்டிகள், 209 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 14 சர்வதேச இருபது20 போட்டிகளில் அவர் நடுவராக பணியாற்றியுள்ளார்.

இதனிடையே, 1999இல் சிங்கப்பூரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி ஒன்றை சூதாட்டக்காரர்கள் மாற்றியமைக்க இவருக்கு இலஞ்சம் கொடுக்க முன்வந்த போது அதுதொடர்பில் தகவலை வழங்கி இலஞ்சத்தை மறுத்ததற்காக விருது பெற்றார்.

இதேவேளை, 2010-ல் இவர் ஓய்வு பெற்ற பிறகு Slow Death: Memoirs of a Cricket Umpire என்ற புத்தகத்தையும் ரூடி கோயர்ட்ஸன் எழுதினார். இவருக்கு ‘ஸ்லோ டெத்’ என்ற செல்லப்பெயர் உண்டு. ஏனெனில் ஆட்டமிழப்பொன்றை வழங்கும் போது மெதுவாக தன் இடது கையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தும் பாணி பலரையும் இவருக்கு ‘ஸ்லோ டெத்’ என்ற பெயரை சூட்ட காரணமானது.

ரூடி கோர்ட்ஸெனின் மறைவுக்கு முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<