புதிய ஜேர்சியுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ் அணி!

138

பங்களாதேஷின் 50து சுதந்திர தினத்தை முன்னிட்டு, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய ஜேர்சியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டித்தொடரில், களமிறங்கவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடருக்கு பின்னர், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் வழங்கப்படும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலகு வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

பங்களாதேஷின் 50வது சுதந்திர தினத்தையொட்டி வடிவமைக்கப்பட்டுள்ள, கிரிக்கெட் அணியின் ஜேர்சியானது, அந்நாட்டின் தேசிய கொடியில் இருக்கும் சிவப்பு மற்றும் பச்சை போன்ற நிறங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, குறித்த ஜேர்சியில் பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக போராடியவர்கள், தியாகிகள் மற்றும் சுதந்திரதின நினைவுசின்னம் என்பவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு தலைவர் அக்ரம் கான் கருத்து வெளியிடுகையில், 

“எமது 50வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதிய ஜேர்சியொன்றை வடிவமைத்துள்ளோம். இதில், தேசிய கொடியில் உள்ள பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்துக்காக 1971ம் ஆண்டு போராடியவர்களுக்காக நாம் இதனை கொண்டாடுகிறோம். இதில், தேசிய தியாகிகளில் நினைவுதூபியையும் நாம் வடிவமைத்துள்ளோம்” என்றார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களுக்கான 2021ம் ஆண்டு வருடாந்த ஒப்பந்தம், எதிர்வரும் மார்ச் மாதத்தில் வழங்கப்படவுள்ளது. கடந்த வருடம் கொவிட்-19 வைரஸ் காரணமாக பங்களாதேஷ் அணி 9 சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தது. எனவே, வீரர்களை சரியாக கணித்துக்கொள்ளும் முகமாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கு பின்னர், ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.

“ஒவ்வொரு வருடமும் வீரர்களின் திறமைகளின் அடிப்படையில், அவர்களுக்கான ஒப்பந்தம் வழங்கப்படும். எனவே, அடுத்துவரும் இரண்டு தொடர்களையும் பார்வையிட்டு, அதன்படி ஒப்பந்தம் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். காரணம், தற்போது வீரர்களின் திறமையை கணிப்பிடுவதற்கு போட்டிகள் குறைவு. இந்த தீர்மானம் பணிப்பாளர் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் மேற்கொள்ளப்படும்” என அக்ரம் கான் மேலும் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுதினம் (20) ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

I>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<