நான்கு மாதங்களின் பின் பயிற்சிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்

145
GETTY IMAGES

நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்த ஞாயிற்றுக்கிழமையில் (19) இருந்து மைதானங்களில் மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

நியூவ் சௌத் வேல்ஸின் உதவி பயிற்றுவிப்பாளராக ஹதுருசிங்க 

கொவிட்-19 வைரஸ் பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உலகில் இடம்பெற்ற அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் தடைப்பட்டிருந்தன. எனினும், இந்த வைரஸ் ஆபத்து சற்று குறைந்திருக்கும் தற்போதைய நிலையில் சில நாடுகள் கிரிக்கெட் போட்டிகளை மீள ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் பங்களாதேஷ் அணி கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிப்பது தொடர்பில் அறிவிப்புக்கள் எதையும் வெளியிடாத சந்தர்ப்பம் ஒன்றிலேயே, வீரர்கள் பயிற்சிகளை மீள ஆரம்பித்திருக்கின்றனர். 

அதன்படி, பங்களாதேஷ் வீரர்கள் தனித்தனியாக தங்களது பயிற்சிகளை நான்கு வெவ்வேறு மைதானங்களில் மேற்கொள்வதோடு, முதற்கட்ட பயிற்சிகளுக்காக பங்களாதேஷ் அணியினைச் சேர்ந்த 10 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

பயிற்சிகளை ஆரம்பித்துள்ள பங்களாதேஷ் வீரர்கள் 

மொஹமட் மிதுன், முஸ்பிகுர் ரஹீம், சபீயுல் இஸ்லாம், இம்ருல் கைஸ், காலேத் அஹ்மட், நசும் அஹ்மட், மஹதி ஹஸன், நூருல் ஹஸன், மெஹதி ஹஸன், நயீம் ஹஸன் 

பயிற்சிகளில் ஈடுபடும் வீரர்கள் அனைவரும் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி வரையில் தங்களது பயிற்சிகளை தொடருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) பயிற்சிகளில் ஈடுபடும் போது வீரர்களை கண்கானிக்கவும், வீரர்களின் உடல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை முகாமைத்துவம் செய்வதற்காகவும் கொவிட்-19 வைரஸ் முகாமைத்துவ குழு என்ற பெயரில் ஒரு குழுவினை நியமனம் செய்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் வரவிருக்கும் முஸ்லிம்களின் ஈத் பண்டிகையைத் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் ஆரம்பமாகாத பட்சத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, குழுக்களாக வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் நோக்கத்தில் காணப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றது.

மூன்று வார ஓய்வுக்கு முகங்கொடுத்துள்ள பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் குஷ்தில் ஷா

இதேநேரம், பயிற்சிகளில் பங்கேற்ற பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான மொஹமட் மிதுன் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

(வெளி) மைதானத்தில் நான்கு மாதங்களின் பின்னர் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஆனால், (முன்னர்) உள் மைதானங்களிலேயே நாங்கள் பயிற்சிகளை மேற்கொண்ட காரணத்தினால் ஓடுவது, துடுப்பாடுவது என எல்லாமே சற்றுக் கடினமாக இருந்தது.”

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கும் துஷார் காந்தி ஹோவ்லடர் ஆரம்பத்தில் வீரர்களுக்கு பயிற்சிகள் கடினமாக இருக்கின்ற போதும் வீரர்கள் போதிய இசைவைப் பெற்ற பின்னர் அவர்களுக்கு இந்தப் பயிற்சிகள் இலகுவாக இருக்கும் எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த பயிற்சிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஒருநாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான தமிம் இக்பால் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் உபாதை ஒன்றுக்கான சிகிச்சையினை பெறவிருக்கும் காரணத்தினால் பங்கேற்றிருக்கவில்லை. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…