புதுமுக வீரர்களுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் பங்களாதேஷ் T20 அணி

101

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு T20I போட்டிகளில் விளையாடுவதற்கான பங்களாதேஷ் குழாம் மூன்று புதுமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பங்களாதேஷ் அணிக்கு ஹதுருசிங்கவின் புதிய திட்டம்

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கே தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரில் ஆடி வருகின்றது. இந்த ஒருநாள் தொடரின் பின்னர் இரு அணிகளும் விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் இடம்பெறுகின்றது.

இந்த T20I தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆடும் 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் புதுமுக வீரர்களாக தவ்ஹித் ரிதோய், ரிஜாவுர் ரஹ்மான் ராஜா மற்றும் தன்வீர் இஸ்லாம் ஆகியோர் இணைந்திருக்கின்றனர். இதில் தவ்ஹித் ரிதோய் துடுப்பாட்டவீரர் என்பதோடு, ரிஜாவுர் ரஹ்மான் ராஜா மற்றும் தன்வீர் இஸ்லாம் ஆகியோர் பந்துவீச்சாளர்களாக காணப்படுகின்றனர்.

இதேநேரம் சுமார் 8 வருடங்களின் பின்னர் பங்களாதேஷ் அணிக்காக மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பத்தினை ஆரம்பத் துடுப்பாட்டவீரரான ரோனி தலுக்தார் பெற்றிருக்கின்றார். கடைசியாக 2015ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அணிக்காக ஆடிய ரோனி தலுக்தார் அண்மையில் நிறைவடைந்த பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) போட்டிகளில் வெளிப்படுத்திய திறமையினை அடுத்தே மீண்டும் தேசிய அணியில் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இறுதியாக நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தின் போது பங்களாதேஷ் குழாத்தில் இடம்பிடித்த யாசிர் அலி, சௌம்யா சர்க்கார், இபடொட் ஹொசைன், மொசாதிக் ஹொசைன் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோருக்கு பங்களாதேஷ் T20 குழாத்தில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

2024 மகளிர் T20 உலகக் கிண்ண நேரடித் தகுதியை இழந்த இலங்கை

பங்களாதேஷ் – இங்கிலாந்து அணிகள் இடையிலான T20I தொடர் ஒருநாள் தொடரின் பின்னர் மார்ச் 09ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, தொடரின் முதல் போட்டி சட்டோக்ராம் அரங்கிலும், அடுத்த இரண்டு போட்டிகள் முறையே மார்ச் 12 மற்றும் 14ஆம் திகதிகளில் டாக்கா அரங்கிலும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

சகீப் அல் ஹசன் (தலைவர்), லிடன் தாஸ், நஜ்முல் ஹசன் ஷான்டோ, அபீப் ஹொசைன், மெஹிதி ஹஸன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மட், ஹசன் மஹ்மூட், நசும் அஹ்மட், நூருல் ஹசன், சமிம் ஹொசைன், ரோனி தலுக்தார், தவ்ஹித் ரித்தோய், ரிஜாவுர் ரஹ்மான் ராஜா, தன்வீர் இஸ்லாம்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<