T20 உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட அவுஸ்திரேலியா

114
Getty Images

T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் சுபர் 12 சுற்றுப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>ஸ்கொட்லாந்தை வீழ்த்தி, ஆப்கானிஸ்தானை பின்தள்ளிய இந்தியா!

மேலும், இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலியா சுபர் 12 சுற்றில் தாம் விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து தமது அரையிறுதி வாய்ப்பினை பிரகாசமாக மாற்றியிருப்பதுடன், மேற்கிந்திய தீவுகள் T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றில் ஒரு வெற்றியினை மாத்திரம் பதிவு செய்து தொடரினை நிறைவு செய்துகொள்கின்றது.

சுபர் 12 சுற்றின் குழு 1 இல் காணப்படும் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு அணிகளுக்கும் கடைசி குழுநிலைப் போட்டியாக அமைந்த இந்தப் போட்டி, அபுதாபி நகரில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டேவிட் வோர்னர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மேற்கிந்திய தீவுகளுக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் சிறந்த ஆரம்பம் ஒன்றினை பெற தவறிய போதும் அணித்தலைவர் கீரோன் பொலார்டின் பொறுப்பான ஆட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பில் பொலார்ட் 31 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 44 ஓட்டங்களை எடுத்தார். அதேநேரம், ஈவின் லூயிஸ் 29 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோஸ் ஹசல்வூட் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க மிச்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்வீதம் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>இலங்கை A அணியை மீண்டும் மிரட்டிய நஷீம் ஷா

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 158 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி போட்டியின் வெற்றி இலக்கினை 16.2 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 161 ஓட்டங்களுடன் அடைந்தது.

அவுஸ்திரேலிய அணியின் வெற்றியினை உறுதி செய்த டேவிட் வோர்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெறும் 56 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களைப் பெற்றிருக்க, மிச்சல் மார்ஷ் அதிரடி அரைச்சதம் ஒன்றுடன் 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் அகில் ஹொசைன் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

>>Scorecard: Australia-vs-West-indies-match-38

முடிவு – அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<