சஞ்சனாவின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு அபார வெற்றி

Australia U19 Women's tour of Sri Lanka 2025

8
Australia U19 Women's tour of Sri Lanka 2025

சுற்றுலா அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்கு எதிராக ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (28) நடைபெற்ற ஒரேயொரு ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சஞ்சனா காவிந்தி மற்றும் ரஷ்மி நெத்ராஞ்சலி ஆகிய இருவரினதும் அபார துடுப்பாட்டங்கள், லிமன்சா திலகரட்ன மற்றும் ஷஷினி கிம்ஹானி ஆகிய இருவரினதும் அசத்தல் பந்துவீச்சு என்பன முக்கிய பங்கு வகித்தன.

தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை இன்னிங்ஸில் சஞ்சனா காவிந்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 121 பந்துகளில் 12 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 92 ஓட்டங்களை எடுத்தார். அவருடன் இணைந்த ரஷ்மி நெத்ராஞ்சலி 84 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கைளை உயர்த்தினார். இருவரும் 5ஆவது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்கள் சேர்த்தனர்.

இது தவிர, ஷஷினி கிம்ஹானி 19 ஓட்டங்களையும், ரஷ்மிகா செவ்வந்தி ஆட்டமிழக்காமல் 15 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து இலங்கை இன்னிங்ஸை 266 ஓட்டங்கள் வரை கொண்டு சென்றனர். அவுஸ்திரேலிய பந்துவீச்சில் அயாகா கடோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு ஆடிய அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்கு 24.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது.

லூசி பின் 44 பந்துகளில் 34 ஓட்டங்களை எடுத்து அவுஸ்திரேலிய அணியின் அதிக ஓட்டங்களைக் எடுத்தவராக இருந்தார். அணித் தலைவி சமாரா டுல்வின் 16 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை பந்துவீச்சாளர்களின் முன் மற்ற துடுப்பாட்ட வீராங்கனைகள் 10 ஓட்டங்களைக் கூட கடக்க முடியவில்லை.

லிமன்சா திலகரட்ன சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஷஷினி கிம்ஹானி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.. ரஷ்மிகா செவ்வந்தி, சமுதி ப்ரபோதா மற்றும் ரஷ்மி நெத்ராஞ்சலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பகிர்ந்து கொண்டனர்.

ஏற்கனவே நடைபெற்ற ஐந்து போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றியீட்டிய இலங்கை இளையோர் மகளிர் அணி தொடரை கைப்பற்றியுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி T20 போட்டி நாளை (30) தம்புள்ளயில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<