அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்கு எதிராக ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (21) நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் T20 தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணியின் அழைப்பின் பேரில் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.
நேற்று நடைபெற்ற முதல் T20 போட்டியில் அரைச் சதமடித்து அசத்திய சஞ்சனா காவிந்தி இப்போட்டியில் 24 ஓட்டங்களையும், ரஷ்மி நேதாஞ்சலி 24 ஓட்டங்களையும், நெதங்கி இசுராஞ்சலி 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணியின் பந்துவீச்சில் அவா ட்ரூரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், லூசி ஃபின் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- மனுதி தலைமையிலான இலங்கை 19 வயதின்கீழ் மகளிர் அணி அறிவிப்பு
- சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை மகளிர் இளையோர் அணிக்கு முதல் வெற்றி
இதனையடுத்து 139 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. அந்த அணிக்காக எஷிலோ ஜூலியன் மற்றும் சமாரா டல்வின் ஆகிய இருவரும் தலா 22 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் 16 வயது இடதுகை சுழல்பந்து வீச்சாளரான அசேனி தலகுணே 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஷஷினி கிம்ஹானி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், வீழ்த்தியிருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது T20 போட்டி 24ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை U19 மகளிர் அணி – 138/9 (20) ரஷ்மி நேத்ராஞ்சலி24, சஞ்சனா கவிந்தி24, நேதகி இசுரஞ்சலி 21, அவா ட்ரூரி 3/24, லூசி ஃபின் 2/30
அவுஸ்திரேலிய U19 மகளிர் அணி – 109/9 (20) ஷிலோ ஜூலியன்22, சமாரா டல்வின்22, அசெனி தலாகுனே 2/15, ஷஷினி கிம்ஹானி 2/17
முடிவு – இலங்கை U19 மகளிர் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<