சொனால், சுதீரவின் அபாரத்தால் ஆஸி. இளையோரை வீழ்த்திய இலங்கை

630

சொனால் தினூஷவின் சகலதுறை ஆட்டம், அறிமுக வீரர் சுதீர திலகரத்னவின் அபார பந்துவீச்சின் உதவியுடன் அவுஸ்திரேலிய இளையோர் (19 வயதின் கிழ்) அணியுடனான 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி 64 ஓட்டங்களினால் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.  

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய இளையோர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் மூன்று நாள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒற்றை டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.  

மொஹமட் சமாஸின் போராட்டம் வீண்; ஆஸி. இளையோரிடம் மீண்டும் வீழ்ந்த இலங்கை

அவுஸ்திரேலிய இளையோர் அணிக்கு எதிராக கொழும்பு பி……

இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுக்களாலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 7 ஓட்டங்களாலும் வெற்றி பெற்று 2-0 என அவுஸ்திரேலிய இளையோர் அணி தொடரில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இளையோர் ஒருநாள் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று (07) நடைபெற்றது.

Photos: Australia U19 Team Tour to Sri Lanka 2019 | 3rd ODI

இதன் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் நிபுன் தனன்ஞய முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இலங்கை அணிக்கு கமில் மிஷார மற்றும் அறிமுக வீரர் கவீஷ அபிஷேக் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்திலேயே பந்து வீச்சில் மிரட்டியது. முதலாவது விக்கெட்டாக கமில் மிஷார 20 ஓட்டங்களுடனும், கவீஷ அபிஷேக் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரைச்சதமடித்து அசத்திய மொஹமட் சமாஸ், வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார். இதனால், ஆரம்பத்திலேயே இலங்கை இளையோர் அணி 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Photos: Australia U19 Team Tour to Sri Lanka 2019 – 2nd ODI

மொஹமட் சமாஸினை அடுத்து ஜோடி சேர்ந்த இலங்கை இளையோர் அணித் தலைவர் நிபுன் தனன்ஞய மற்றும் சொனால் தினூஷ ஆகியோர் பொறுமையான இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். அந்த வகையில் இரண்டு வீரர்களினாலும் 4ஆம் விக்கெட்டுக்காக 106 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தது. அரைச்சதம் கடந்த சொனால் தினூஷ, இம்முறை போட்டிகளில் 2ஆவது அரைச்சதத்தைப் பெற்று 50 ஓட்டங்களுடன் வெளியேறினார்

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்தும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித் தலைவர் நிபுன் தனன்ஞய அரைச்சதம் கடந்து 71 ஓட்டங்களுடனும், இதற்கு அடுத்தப்படியாக களமிறங்கிய ரவீன் டி சில்வா, 14 ஓட்டங்களுடனும் தன்வீர் சங்காவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் சீறான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, இலங்கை இளையோர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை இளையோர் அணியை பொருத்தவரை மத்திய வரிசையில் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்களிப்புச் செய்த அணித் தலைவர் நிபுன் தனன்ஞய 71 ஓட்டங்களையும், சொனால் தினூஷ 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் ஷேக் ஈவென்ஸ் 3 விக்கெட்டுக்களையும், லியெம் மார்ஷல் மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.  

இதையடுத்து, 257 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய இளையோர் அணிக்கு பெக்ஸ்டர் ஜே ஹோல்ட், லெக்லன் ஹார்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எனினும், அஷேன் டேனியல் வீசிய 9ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் லெக்லன் ஹார்னே 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  

இலகு வெற்றியினை பதிவு செய்த இலங்கை A கிரிக்கெட் அணி

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு…

பொறுப்பாக விளையாடிய பெக்ஸ்டர் ஜே ஹோல்ட் அரைச் சதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார். எனினும், சுதீர திலகரத்ன வீசிய பந்தில் கமில் மிஷாரவிடம் பிடிகொடுத்து 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய டெரன் ஜோஸ் கான் 10 ஓட்டங்களுடனும், வில் சதர்லண்ட் ஒரு ஓட்டத்துடனும் ரொஹான் சன்ஜயவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த கொரி ஹன்டர் 18, மெதிவ் வில்லன்ஸ் 1, கீகன் ஓட்ஸ் 6 ஓட்டங்களுடன் சொனால் தினூஷவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேற, அந்த அணி 129 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இப்படியான ஒரு நிலையில் 8ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஷெக் இவென்ஸ் மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் நிதானமான இணைப்பாட்டம் (39) ஒன்றினை வழங்கி அவுஸ்திரேலிய இளையோர் அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

இறுதியில், சுதீர திலகரத்ன வீசிய பந்தில் ஷெக் இவென்ஸ் 17 ஓட்டங்களுடனும், தன்வீர் சங்கா 39 ஓட்டங்களுடனும், இயென் கார்லயல் 7 ஓட்டங்களுடனும் தமது விக்கெட்டினைப் பறிகொடுக்க, அவுஸ்திரேலிய இளையோர் அணி 192 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 64 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

ஒருநாள் அரங்கில் வரலாறு படைத்த திசர பெரேராவின் சாதனைத் துளிகள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள்…

இதேநேரம், இலங்கை இளையோர் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட காலி றிச்மண்ட் கல்லூரி வீரர் சுதீர திலகரத்ன 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், கொழும்பு மஹானாம கல்லூரி வீரர் சொனால் தினூஷ 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என அவுஸ்திரேலிய இளையோர் அணி கைப்பற்றியுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<