இந்திய தொடருக்கான அவுஸ்திரேலிய ஒருநாள் குழாம் அறிவிப்பு

73
Australia v New Zealand
GETTY IMAGES

அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் இந்தியா செல்லும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவிருக்கின்றது. இந்நிலையில், இத் தொடருக்கான 14 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய குழாம் இன்று (17) அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இத் தொடருக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இதுவரையில் ஒருநாள் சர்வதேச போட்டிகள் எதிலும் விளையாடாத துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லபசக்னே இடம்பெற்றிருக்கின்றார். குயின்ஸ்லாந்தை சேர்ந்த 25 வயது நிரம்பிய மார்னஸ் லபசக்னே அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அண்மையில் பங்குபற்றிய டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த காரணத்தினாலேயே ஒருநாள் அணியில் முதல்தடவையாக வாய்பை பெற்றிருக்கின்றார். 

அதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அண்மையில் ஆடிய T20 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வேகப் பந்துவீச்சாளர்களான  கேன் ரிச்சர்ட்சன், சீன் எப்போட் ஆகியோரும் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்காக குழாமில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

இந்திய ஒருநாள் தொடரில் கேன் ரிச்சர்ட்சன் மற்றும் சீன் எப்போட் ஆகிய வேகப் பந்துவீச்சாளர்களுடன் சேர்த்து மிச்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வூட் ஆகியோர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்களாக காணப்படுகின்றனர். 

இவர்கள் தவிர அஷ்டன் ஏகார் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு சுழல் பந்துவீச்சாளர்களாக பலம் தரவிருக்கின்றனர். இதேநேரம், கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலிய அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்த நதன் லயன் இந்திய ஒருநாள் தொடரில் உள்வாங்கப்படவில்லை.  

அதேவேளை அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ள டேவிட் வோர்னர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆரோன் பின்ச் ஆகியோர் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்ப வரிசைத் துடுப்பாட்டத்தை பலப்படுத்துகின்றனர். 

இளம் வீரர்களாக இருக்கும் அலெக்ஸ் கேரி மற்றும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான பீட்டர் ஹேன்ஸ்ட்கொம்ப் ஆகியோர் அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்டத்திற்கு பங்களிப்பு செய்ய உள்ளனர். 

இந்திய – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜனவரி மாதம் 14ஆம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளது. இதன் பின்னர் இரண்டாவது போட்டி ஜனவரி 17ஆம் திகதி ராஜ்கோட் நகரிலும், மூன்றாவது போட்டி ஜனவரி 19ஆம் திகதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கின்றன.

அவுஸ்திரேலிய ஒருநாள் அணிக்குழாம் 

ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), சீன் எப்போட், அலெக்ஸ் கேரி, பீட்டர் ஹேன்ஸ்ட்கொம்ப், ஜோஸ் ஹசல்வூட், மார்னஸ் லபசக்னே, கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், அஸ்டன் டேர்னர், டேவிட் வோர்னர், அடம் ஷம்பா