ஆரோன் பின்ச் தலைமையில் T20 தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலியா

361
Aaron
Image courtesy - ICC

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவர்களாக அலெக்ஸ் கெரி மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் (7) ஆரம்பமாகவுள்ளதுடன், T20 தொடர் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், போட்டித் தொடருக்கான டெஸ்ட் குழாமை ஏற்கனவே அறிவித்திருந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, நேற்று T20 தொடருக்கான குழாமை அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள T20 குழாமின் தலைவராக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டுள்ளார். பின்ச் ஏற்கனவே ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு T20 தொடரின் தலைவராக செயற்பட்டிருந்ததுடன், அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். இதன் காரணமாக பின்ச் மீண்டும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் குறிப்பிட்டார்.

>> இங்கிலாந்துடன் மோதும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாம் வெளியீடு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 பேர் கொண்ட குழாமில் அறிமுக வீரராக பென் மெக்டெர்மோட் பெயரிடப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இவர், பிக்பேஷ் லீக் தொடரில் 19 போட்டிகளில் 145.78 என்ற ஓட்ட வேகத்துடன், 34.60 என்ற சராசரியில் ஓட்டங்களை குவித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் லின் உபாதையிலிருந்து மீண்டு, T20 குழாமில் இடம்பிடித்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஜே.எல்.டி. கிண்ண ஒருநாள் தொடரில் விளையாடி வரும் கிரிஸ் லின் 6 இன்னிங்சுகளில் 87.40 என்ற சராசரியில் 437 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவருடன் டெஸ்ட் குழாமிலிருந்து நீக்கப்பட்டிருந்த கிளேன் மெக்ஸ்வேலும் T20 குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் ஜே.எல்.டி கிண்ணத் தொடரில் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், 257 ஓட்டங்களை விளாசிய டி ஆர்சி ஷோர்ட் மற்றும்  முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க், என்ரு டை மற்றும் நெதன் கோல்டர்-நெயில் ஆகியோரும் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது T20 போட்டிகள் 26 ஆம், 28 ஆம் திகதிகளில் டுபாயில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலிய T20 குழுாம்

ஆரோன் பின்ச் (தலைவர்), மிச்சல் மார்ஷ் (உப தலைவர்), அலெக்ஸ் கெரி (உப தலைவர்), அஷ்டன் ஆகர், நெதன் கோல்டர்-நெயில், கிரிஸ் லின், நெதன் லையோன், கிளேன் மெக்ஸ்வேல், பென் மெக்டெர்மோட், டி ஆர்சி ஷோர்ட், பில்லி ஸ்டென்லேக், அன்ரு டை, அடம் ஸம்பா

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<