2020 ஒலிம்பிக் தொடருக்கான வீரர்கள் அடைவு மட்டங்கள் வெளியானது

132

ஜப்பான் – டோக்கியோவில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடருக்காக அமைக்கப்பட்ட அடைவு மட்டங்கள் மற்றும் நுழைவுக்கான தரம் என்பவற்றுக்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனங்களின் சங்கம் அனுமதியளித்துள்ளது. அதேநேரம், போட்டியிடவுள்ள வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் அடைவு மட்டத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் மெய்வல்லுனர் வீரர்களுக்கும் தரப்படுத்தல்

ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர்…

ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெறுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் சிக்கலானவையாக அமைந்திருந்தாலும், சர்வதேச ரீதியில் உள்ள வீரர்கள், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கு அதிக வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் என சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் தொடருக்கான தகுதிக்காலம் எதிர்வரும் மே முதலாம் திகதி ஆரம்பமாவதுடன், 2020ம் ஆண்டு ஜுன் 29ம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது. இந்த காலப்பகுதிக்குள் டயமண்ட் லீக் உட்பட பல்வேறு சர்வதேச மெய்வல்லுனர் தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில், அதன் மூலம் வீரர்கள் தங்களுடைய வாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதேநேரம், ஒலிம்பிக் தொடருக்கான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அதிக காலத்தினை வழங்கும் முகமாக, மரதன் மற்றும் 50 கிலோ மீற்றர் வேக நடை போட்டிகளுக்கான இறுதித் திகதி 2020ம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது.

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் இரண்டு முறைகளை சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம், அறிமுக்கப்படுத்தியிருந்தது. ஒலிம்பிக் போட்டிகளுக்கான அடைவு மட்டம் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள் தரவரிசை என இரண்டு முறைகளின் கீழ் வீரர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்காக வீரர்களை தெரிவுசெய்யவுள்ள புதிய முறைகள்

  • அறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் வீரர்கள் அடைந்துள்ள அடைவு மட்டங்கள்.
  • சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள தொடர்களிலிருந்து அமைக்கப்பட்டுள்ள தரவரிசையில், குறிப்பிடப்பட்டுள்ள தெரிவுக்கான காலப்பகுதியில் வீரர்கள் தரவரிசையில் பிடித்துள்ள இடங்கள்.

இதன்படி 50 சதவீதமான வீரர்கள் அடைவு மட்டங்களின் அடிப்படையிலும், மிகுதி 50 சதவீதமான வீரர்கள் சர்வதேச மெய்வல்லுனர் தரவரிசையின் அடிப்படையிலும் ஒலிம்பிக் தொடருக்கு உள்வாங்கப்படவுள்ளனர். அதேநேரம், இவ்வாறு புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் தெரிவுக்கான புதிய முறைகள் குறித்து வீரர்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வுகளை நடத்த சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுனரில் 5,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்பு

கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின்…

இதேவேளை, சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய தெரிவுக்கான அடைவு மட்டங்களை பார்க்கும் போது, ஒலிம்பிக் தொடரில் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அநேகமான அடைவு மட்டங்கள் இலங்கையின் தேசிய சாதனைகளை விடவும் அதிகமாக உள்ளன. இதனால், இலங்கையின் வீர, வீராங்கனைகள் கடந்த காலங்களை விடவும், இம்முறை அதிகமான திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்திலேயே ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

2020ம் ஆண்டு ஒலிம்பிக் தொடருக்கான அடைவு மட்டங்கள்

ஆண்கள்  நிகழ்வு பெண்கள்
10.05 100 மீற்றர் 11.15
20.24 200 மீற்றர் 22.80.
44.90 400 மீற்றர் 51.35.
1:45.20. 800 மீற்றர் 1:59.50.
3:35.00. 1500 மீற்றர் 4:04.20.
13:13.50. 5000 மீற்றர் 15:10.00.
27:28.00. 10000 மீற்றர் 31:25.00.
13.32 110 /100 தடை தாண்டல் 12.84.
48.90 400M தடை தாண்டல் 55.40.
8:22.00. 3000M சட்டவேலி ஓட்டம் 9:30.00.
2.33 உயரம் பாய்தல் 1.96
5.80 கோலூன்றி பாய்தல் 4.70.
8.22 நீளம் பாய்தல் 6.82.
17.14 முப்பாய்ச்சல் 14.32.
21.10 குண்டு எறிதல் 18.50.
66.00 பரிதி வட்டம் 63.50.
77.50 சம்மட்டி எறிதல் 72.50.
85.00 ஈட்டி எறிதல் 64.00.
8350.00 டெக்கத்லன்/ஹெப்டத்லன் 6420
1:21.00. 20Km வேக நடை போட்டி 1:31.00.
3:50.00. 50Km வேக நடை போட்டி N/A
2:11.30. Marathon 2:29.30.

 

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<