சரித் அசலங்கவின் மோசமான துடுப்பாட்டம் தொடர்பில் கூறிய பானுக ராஜபக்ஷ!

Asia Cup 2022

1702

இந்திய அணிக்கு எதிரான போட்டி மற்றும் ஆசியக்கிண்ணத்தொடரில் ஓட்டங்களை பெறத்தவறிவரும் சரித் அசலங்கவின் துடுப்பாட்ட பிரகாசிப்புகள் தொடர்பில் பானுக ராஜபக்ஷ தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

சரித் அசலங்க தற்போது ஓட்டக்குவிப்பில் இல்லாவிட்டாலும், அவர் போர்மிற்கு திரும்புவதற்கு ஒரேயொரு 30 ஓட்டங்கள் கொண்ட இன்னிங்ஸ் போதுமானது என இவர் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து இந்தியா வெளியேற்றமா?

“சரித் அசலங்கவின் சராசரி தற்போது 23 ஆக உள்ளது. நாம் வீரர்களுக்காக நிற்கின்றோம். ஒவ்வொரு வீரருக்கும் கடினமான காலப்பகுதி வரும். தனிப்பட்ட ரீதியில் எனக்கும் கடினமான காலங்கள் வந்திருக்கின்றன.

நம்பிக்கை மட்டத்தை உயர்த்துவதற்கு வீரர்களுக்கு உதவவேண்டும். ஒரு 30 ஓட்டம் கொண்ட இன்னிங்ஸை அவர் பெற்றால், மீண்டும் ஓட்டக்குவிப்புக்கு வருவார். அணியின் உப தலைவரான அவருக்காக நாம் அனைவரும் நிற்கின்றோம். அவர் பயிற்சிகளில் சிறப்பாக செயற்படுகின்றார். எனவே, அவர் ஓட்ட பிரகாசிப்புக்கு வரும்வரை நாம் உதவ எதிர்பார்த்துள்ளோம்” என குறிப்பிட்டார்.

இதேவேளை இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றமைக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது என குறிப்பிட்ட இவர், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

“டுபாய் ஆடுகளத்தில் 165 அல்லது 170 ஓட்டங்கள் சராசரியானது. எனவே இந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் இந்திய அணியை கட்டுப்படுத்தினால் போட்டியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என நம்பினோம்.

நாம் 170 ஓட்டங்களுக்கு அதிகமான ஓட்ட எண்ணிக்கையை அடைந்து வெற்றிபெற்ற நான்காவது சந்தர்ப்பம் இதுவென நினைக்கிறேன். எனவே எமக்கு நம்பிக்கை இருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறோம். முதல் இரண்டு ஓவர்களை சற்று பார்வையிட்டு, மூன்றாவது ஓவரிலிருந்து ஓட்டங்களை குவிப்பதற்கு கூறியுள்ளோம். இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்கவின் ஆரம்ப துடுப்பாட்டம்தான்” என்றார்.

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தை பொருத்தவரை இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிகளுக்கு வெற்றிபெறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக மேலும் சுட்டிக்காட்டினார்.

“போட்டியில் நாணய சுழற்சியை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஷார்ஜா மற்றும் டுபாய் ஆடுகளங்களின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிகளுக்கு சாதகங்கள் அதிகமாக உள்ளன” என்றார்.

ஆசியக்கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கு எதிரான சுபர் 4 சுற்றின் 2வது போட்டியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை நெருங்கியுள்ளதுடன், அடுத்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வெள்ளிக்கிழமை (09) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<