இந்திய அணிக்காக மீண்டும் ஆடவுள்ள அஸ்வின்

Hong Kong Sixes 2025

7
Ashwin

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஹொங் கொங் சிக்ஸஸ் தொடரின் இந்திய அணிக்காக ஆடவுள்ளதாக அறிவித்துள்ளார்.   

கடந்த டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் இடைநடுவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் திடீரென அறிவித்தார்.

அதன் பிறகு இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், ஒன்பது போட்டிகளில், 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதையடுத்து, ஐபிஎல் போட்டிகள் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் விளையாட ஆர்வத்துடன் இருப்பதாகவும் அஸ்வின் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அஸ்வின் மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்த ஆண்டுக்கான ஹொங் கொங் சிக்ஸஸ் தொடர் நவம்பர் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு அஸ்வின் தீர்மானித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின்,”நாம் சிறுவயதில் ஹொங் கொங் சிக்ஸர் தொடரை தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். அந்த தொடர் எப்போதுமே எனக்கு ஆர்வத்தை தந்திருக்கின்றது. இந்த தொடரில் இடம்பெற வேண்டும் என்று நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றேன். இந்த தொடர் புது வகையான யுக்திகளை கையாள வாய்ப்பை தரும். அது மட்டுமில்லாமல் கடும் நெருக்கடியில் நமது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த தொடரில் எனது முன்னாள் வீரர்களுடன் இணைந்து விளையாட மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றேன். அது மட்டுமில்லாமல் இந்த தொடரில் பல திறமை வாய்ந்த எதிரணிகள் உள்ளன. எனவே இந்த தொடர் நிச்சயம் எங்களுக்கு கடும் சவால்களை கொடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த ஆண்டு ஹொங் கொங் சிக்ஸஸ் தொடரில் அஸ்வின் விளையாடுவதற்கு குறித்து ஹொங் கொங் கிரிக்கெட் சபையின் தலைவர் புர்ஜி ஷ்ராஃப் கருத்து தெரிவிக்கையில், அஸ்வின் இந்த தொடரில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றது. நாங்கள் அஸ்வினை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம். அஸ்வினின் வருகை மூலம் இந்திய அணியின் பலம் அதிகமாகி இருக்கிறது. அஸ்வின் போன்ற அறிவார்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறுவதன் மூலம் நிச்சயம் இந்த தொடர் வேறு ஒரு கட்டத்திற்கு செல்லும். இந்த தொடர் பொழுதுபோக்குக்காகவும், திறமைகளை வெளிக்காட்டுவதற்காகவும் புதுமைக்காகவும் நடத்தப்படுகிறது இந்த அனைத்து தகுதிகளும் அஸ்வினுக்கு இருக்கிறது. எனவே இந்த போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறியுள்ளார்.

1992ஆம் ஆண்டு ஆரம்பமாகிய 6 ஓவர்கள் கொண்ட ஹொங் கொங் சிக்ஸஸ் தொடரானது 2017 வரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. எனினும், 7 ஆண்டுகள் வரை நடைபெறாமல் இருந்த இத்தொடரானது கடந்த ஆண்டில்தான் மீண்டும் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை அணி சம்பியனாகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<