ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைமையில் அதிரடி மாற்றங்கள்

270
ICC

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த அஸ்கர் ஆப்கான் தலைவர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக இன்று (05) அறிவித்துள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

கிரிக்கெட் ரசிகர்களது எதிர்பார்ப்பை …..

இந்த நிலையில் அணித்தலைமை வெற்றிடத்தை நிரப்பும் வகையில், ரஷீட் கான் T20I போட்டிகளுக்கான தலைவராகவும், ரெஹமட் சாஹ் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், குல்பதீன் நயிப் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அனைத்துவிதமான போட்டிகளுக்குமான உப தலைவர்களையும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ளது. இதில், ஒருநாள் போட்டிகளின் உப தலைவராக ரஷீட் கான், T20I போட்டிகளுக்கு சபிகுல்லா சபிக் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான உப தலைவராக ஹஸ்மத்துல்லாஹ் சஹிடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில், ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணியை 28 வயதான குல்பதீன் நயிப் வழி நடத்தவுள்ளார். இவர், இதுவரையில் தேசிய அணியை வழி நடத்தியதில்லை என்பதுடன், தற்போதுள்ள வீரர்களில் ரஷீட் கான் மாத்திரமே ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார். ரஷீட் கான், நான்கு ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியை வழி நடத்தியுள்ளார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் பதவிலிருந்து நீக்கப்பட்ட அஸ்கர் ஆப்கான், அந்த அணியின் மிகவும் வெற்றிகரமான தலைவராக கடந்த காலங்களில் வலம் வந்திருந்தார். மொஹமட் நபிக்கு பதிலாக 2015ம் ஆண்டு அஸ்கர் ஆப்கான் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக பதவியேற்றார்.

இவரின் தலைமை பதவியின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தான் அணி, ஐசிசியின் முழு உறுப்புரிமையை பெற்றதுடன், அயர்லாந்து அணிக்கு எதிராக தங்களுடைய முதல் டெஸ்ட் வெற்றியையும் சுவைத்தது. அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளின் கிண்ணத்தையும் இந்த அணி கைப்பற்றியிருந்தது.

அதேபோன்று, இதுவரையில் ஆப்கானிஸ்தான் அணியானது அஸ்கர் ஆப்கான் தலைமயில் 33 ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், இவர் தலைமை தாங்கிய 59 T20I போட்டிகளில் 37 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

உலகக் கிண்ணம் நெருங்கி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

அதேநேரம், தங்களுடைய முதலாவது உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<