எல்லே சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு அர்ஜுன ரணதுங்க போட்டி

140

இலங்கை எல்லே சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கைக்கு 1996 உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

கடவத்தை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற எல்லே சம்மேளனத்தின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்களுடனான பேச்சுவார்த்தையின் பிறகு இந்த முடிவை எடுத்திருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இதன்படி, எல்லே சம்மேளனத்தின் தலைவராக தேர்வாகும் பட்சத்தில் அதன் வளர்ச்சிக்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயார் என அர்ஜுன ரணதுங்க வாக்குறுதி அளித்துள்ளார். இந்த சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்

“கிரிக்கெட் விளையாட்டில் இருந்து பெற்றுக்கொண்ட அறிவு மற்றும் அனுபவத்தை எல்லே விளையாட்டின் நிர்வாகத்தில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.”

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவரின் யாழ் விஜயத்தில் என்ன நடந்தது?

”அத்துடன், இலங்கை எல்லே விளையாட்டு பிரபல்யமாகவுள்ள 6 மாவட்டங்களை தெரிவு செய்து மாவட்டங்களுக்கு இடையிலான போட்டித் தொடரொன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்

குறிப்பாக, இலங்கை எல்லே சம்மேளனத்துக்கான ஒரு நிலையான சட்டக் கோவையொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

“ஒரு வீரராக நான் எல்லே விளையாடியுள்ளேன். அதனால் தலைவராக போட்டியிட வேண்டியே ஏற்பட்டால் அதற்கு நான் தயாராக உள்ளேன்.” 

என்னுடைய கிரிக்கெட் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள இந்நாட்டில் இதுவரை செயற்பட்ட எந்தவொரு இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.” 

”இவ்வாறான நிலையில், இலங்கையின் கிரிக்கெட் தொடர்பில் திரும்பிப் பார்க்கவும் நான் தயாராக இல்லை. அதன் காரணமாக எல்லே போன்ற மிகவும் வறுமையுடனும், போதியளவு வசதிகளும் இன்றி உள்ளதொரு விளையாட்டுக்கு சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் அது உலகக் கிண்ணத்தை வென்றதொரு மகிழ்ச்சியை எனக்கு கொடுக்கும்.” என அவர் கூறினார்.

இந்த சந்திப்பில் இலங்கை எல்லே சம்மேளனத்தின் முன்னாள் செயலாளரான சிறிபால ரணசிங்க, தேசிய அமைப்பாளர் சாமர சேரசிங்க உள்ளிட்ட எல்லே நடுவர்கள் மற்றும் நாட்டில் உள்ள எல்லே கழகங்களின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இலங்கை எல்லே சம்மேளனத்தின் நிர்வாக சபை தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதற்கு தற்போதைய தலைவரான சஹன் ப்ரதீப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க