பாடசாலைகள் மட்ட சிறுவர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் நாளை ஆரம்பம்

127

கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பிரிவும் இணைந்து மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகள் நாளை (03) கண்டி போகம்பரை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளன.   

இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் தொடரில் கிழக்கு வீரர்கள் அபாரம்

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்.. முன்னதாக பெண்களுக்கான 1,500 …

தரம் 3, தரம் 4 மற்றும் தரம் 5 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் விளையாட்டுத்துறை ஆர்வத்தை அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமான வீரர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன் இந்த சிறுவர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட முன்னோட்டப் போட்டிகளில் தகுதிபெற்ற 5,940 மாணவர்களுள் மூன்றாம் மற்றும் நான்காம் தர மாணவர்களுக்கிடையிலான போட்டி நாளையும்(03) நாளை மறுதினமும்(04) கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெறவுவுள்ளது. தரம் 5 மாணவர்களுக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இதன்படி, நாளை ஆரம்பமாகவுள்ள போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியிலிருந்து தெரிவாகிய தரம் 3ஐச் சேர்ந்த 1,920 மாணவர்களும், தரம் 4ஐச் சேர்ந்த 2,016 மாணவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வேடிக்கை, உடற்தகுதி, நட்பு உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகளில் நடத்தல், ஓடுதல், சுழல்தல் மற்றும் எறிதல் ஆகிய விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளதுடன், இப் போட்டிகள் தனி நபர் குழுக்கள் மற்றும் கலப்பு போட்டிகளாகவும் இடம்பெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

அதேநேரம், 2015இல் இந்த மெய்வல்லுநர் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்ட போது சுமார் 55 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இவ்வாண்டு உள்ளூர் T20 தொடரில் முதல் முறை விக்கெட் வீழ்த்த தவறிய மாலிங்க

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான ..

எனினும், இம்முறை மெய்வல்லுநர் போட்டிகளை வலய மட்டங்களில் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதுதொடர்பில் நெஸ்லே லங்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகளில் சம்பியனுக்கு வழங்கப்படவுள்ள கிண்ணத்தை கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் பிரேகேடியர் மஞ்சுள காரியவசம், கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை விசேட ஆலோசகர் சுனில் ஜயவீர ஆகியோரிடம் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் கூட்டாண்மை விடயங்களுக்கான உதவித் தலைவர் பந்துல எகொடகே கையளித்தார்.