இந்தியாவிலும், இலங்கையிலும் அடுத்த ஆண்டு கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதிபெற்றுக்கொண்ட 20 அணிகளின் விபரமும் வெளியாகியுள்ளன.
20 அணிகள் பங்கேற்கும் 10ஆவது ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி – மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், போட்டியை நடத்தும் இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் இறுதியாக 2024இல் நடைபெற்ற T20 உலக கிண்ணத்தில் முதல் ஏழு இடங்களைப் பிடித்து 2026 T20 உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெற்றுக்கொண்டன.
இதனைத் தொடர்ந்து T20 அணிகளின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் 2026 T20 உலக கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. அமெரிக்கா பிராந்தியத்திலிருந்து கனடா தகுதி பெற்றது. அதேபோன்று ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்து இத்தாலி அணி முதல் முறையாக T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட தகுதி பெற்றது. இத்தாலியுடன், நெதர்லாந்து அணியும் ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்து இந்த தொடரில் ஆட தகுதி பெற்றது.
இந்த நிலையில், ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் இருந்து நமீபியா, ஜிம்பாவே ஆகிய அணிகள் 2026 T20 உலக கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுள்ள அதேவேளை, ஆசிய பிராந்தியத்திலிருந்து நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
- T20 உலகக் கிண்ணத்துக்கு முதல் முறையாக தகுதி பெற்றது இத்தாலிv
- 2026 மகளிர் T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டி லோர்ட்ஸில்
2026 T20 உலகக் கிண்ணத் தொடரும் இறுதியாக 2024 இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தைப் போல 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பங்கு பெற உள்ளது. அதாவது ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம்பெற உள்ளன.
இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சுப்பர் 8 சுற்றில் நான்கு அணிகளாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணி அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
இதேவேளை, 2026 T20 உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவின் 5 மைதானங்களிலும், இலங்கையின் இரண்டு மைதானங்களிலும் நடைபெறவுள்ளது. இதில் இறுதிப் போட்டி அஹமதாபாத் அல்லது கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகாவிட்டால், 2026 T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<