தெருவில் வாழ்ந்து உலகக் கிண்ண வீரராக வந்தவரின் கதை

4642

நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில் நைஜீரிய அணிக்கு எதிராக ஈரான் தனது முதல் போட்டியில் ஆடியபோது அந்த அணியின் கோல்காப்பாளர் அலிரேசா ஹகிகி தனது அழகான தோற்றத்தால் அனைவரது பார்வையையும் வென்றது நினைவிருக்கும்.

மொரோக்கோவை போராடி சமன் செய்த ஸ்பெயின்: போர்த்துக்கலுக்கு மற்றொரு அதிர்ச்சி முடிவு

ஆனால், இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற ஈரான் அணியின் கோல்காப்பாளர் அலிரேசா பெய்ரண்ட்வாண்ட் அத்தனை அழகான தோற்றம் கொண்டவரல்ல. ஆனால், அவரது பின்புலத்தை தெரிந்தவர்கள் அவர் மீது அலாதிப் பிரியம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

லோரஸ்தான் மாகாணத்தின் சரபியாஸ் என்ற கிராமத்தில் ஒரு நாடோடி குடும்பத்திலேயே பெய்ரண்ட்வாண்ட் பிறந்தார். தமது ஆடுகளின் மேய்ச்சலுக்காக ஊரூராக சுற்றித் திரிவதுதான் இவர்களின் வேலை. பெய்ரண்ட்வாண்டின் முதல் வேலையும் ஆடு மேய்ப்பதுதான். நேரம் கிடைக்கும்போது கால்பந்து ஆடுவார். அதுபோக, டால் பரான் என்ற உள்ளூர் விளையாட்டிலும் அவர் திறமை மிக்கவர். டால் பரான் விளையாட்டு என்பது யார் அதிக தூரம் கல்லை எறிவது என்ற போட்டியாகும்.

12 வயதாகும்போது சரபியாஸ் கிராமத்தில் நிரந்தரமாக தங்கிய பெய்ரண்ட்வாண்ட் உள்ளூர் கால்பந்து அணி ஒன்றில் பயிற்சி பெற்றார். ஆரம்பத்தில் முன்களத்தில் ஆடிய அவர் கோல்காப்பாளர் காயமடைந்தபோது அந்த இடத்தில் ஆடி பந்து வலைக்குள் செல்லாமல் சிறப்பாக தடுத்தார். இதனால், தான் கோல்காப்பாளராக ஆட பெய்ரண்ட்வாண்ட் தீர்மானித்தபோது அவரது தந்தை அதனை கடுமையாக எதிர்த்தார்.

பல ஈரானிய தந்தைகள் போல பெய்ரண்ட்வாண்டின் தந்தைக்கும் அவர் கால்பந்து ஆடுவது பிடிக்கவில்லை. எனது தந்தைக்கு கால்பந்து ஆட்டம் பிடிக்காது. என்னை வேலைக்கு போகுமாறு நச்சரிப்பார். எனது ஆடைகள், கையுறைகளைக் கூட கிழித்தெறிவார். இதனால் பல தடவைகள் வெறுங்கையோடு ஆடியிருக்கிறேன் என்கிறார் அவர்.

இதனால் வீட்டை விட்டு ஓடிய அந்த இளம் கோல்காப்பாளர் தலைநகர் டெஹ்ரானில் பெரிய அணி ஒன்றுக்காக விளையாட வாய்ப்புத் தேடி அலைந்தார்.

கையில் பணமும் இல்லாமல் தலைநகருக்கு வந்து ஏழைகள் தங்கும் அசாதி கோபுரத்தை சுற்றியே அவர் இரவுகளை கழித்தார். ஒருநாள் இரவு இளம் விற்பனையாளர் பெய்ரண்ட்வாண்டுக்கு தமது வீட்டில் இடம் கொடுக்க முன்வந்தார். ஆரம்பத்தில் அதற்கு ஒப்புக்கொண்ட அவர் மனம்மாறி தான் பயிற்சிகள் பெறும் கழகத்திற்கு திரும்பி வந்தார்.  

கழகத்தின் வாயில் கதவுக்கு அருகில் நான் உறங்குவேன், காலை விழித்துப்பார்த்தால் போகின்ற வருகின்றவர்கள் வீசியெறிந்துவிட்டுப் போன நாணய குற்றிகள் தெரியும் என்கிறார். அவர்கள் நான் பிச்சைக்காரன் என்று நினைத்துவிட்டார்கள். என்றாலும் நீண்ட காலத்திற்கு பின்னர் ருசியான காலை உணவை பெற முடிந்தது என்றார் அந்த இளம் கோல்காப்பாளர்.  

கடைசியில் அந்த கழகத்தில் ஆட பெய்ரண்ட்வாண்டுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் சக வீரர் ஒருவரின் தந்தைக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் வேலைபார்த்தார். இரவில் அங்கேயே உறங்கவும் இடம் கிடைத்தது.  

தனது உயரத்துக்கு நன்றி சொல்ல அவர் அடுத்து கார் கழுவும் இடம் ஒன்றில் வேலை பார்த்தார். அடுத்து அவர் பீட்ஸா கடை ஒன்றில் வேலை செய்தபோது பீட்சா சாப்பிட வந்த பயிற்சியாளர் அவரை பார்த்ததால் அந்த வேலையையும் விட வேண்டி ஏற்பட்டது.

பிரேசில் நெருக்கடி இன்றி அடுத்த சுற்றில் : நொக் அவுட்டில் சுவீடனுடன் மோதும் சுவிட்சர்லாந்து

இன்னொரு வேலையை தேடுவது கடிமாக இருந்தது. கடைசியில் அவருக்கு தெருவை சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. பெரிய பூங்காவை இரவு முழுவதும் சுத்தம் செய்துவிட்டு காலையில் போட்டியில் பங்கேற்பது கடிமாகவே இருந்தது என்கிறார் அவர்.

தனது வேதனைகளுக்கு மத்தியில் பெய்ரண்ட்வாண்ட் சோபிக்க ஆரம்பித்தார். 23 வயதுக்கு கீழ்ப்பட்ட ஈரான் தேசிய அணிக்கு தேர்வானார். அப்போதுதான் சிறுபராயத்தில் கற்கலை எறிந்து விளையாடிய ஆட்டம் அவருக்கு கைகொடுத்தது. வேறு எந்த கோல்காப்பாளரையும் விட நீண்ட தூரம் பந்தை எறிய அவரால் முடியுமாக இருந்தது.  

2015 ஆம் ஆண்டில் ஈரானின் முதல்நிலை கோல்காப்பாளராக மாறிய அவர் 2018 உலகக் கிண்ணத்திற்கு ஈரான் அணிக்கு ஆட தகுதி பெற்றார். எனது கனவை உண்மையாக்குவதற்கு நான் பல நெருக்கடிகளையும் கடந்து வந்தேன். நான் இந்த நிலைமைக்கு வரக் காரணமான கடந்த காலத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்என்று பெய்ரண்ட்வாண்ட் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ணத்தில் ஆடிய பெய்ரன்ட்வான்டின் புதுக்கனவு ஐரோப்பிய கழகம் ஒன்றுக்கு ஆடுவதாகும். நாடோடிகளின் பயணம் எப்போதும் முடிவதே இல்லை!

  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க