முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கான் அணிக்கு இலகு வெற்றி

74

சுற்றுலா அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதலாவது போட்டி இன்று (28) இந்தியாவின் தெஹ்ரா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணியை 161 ஓட்டங்களுக்குள் சுருட்டியது ஆப்கான் அணி. போட்டியின் ஆரம்பம் முதல் தமது விக்கெட்டுகளை பறிகொடுத்த அயர்லாந்து அணி ஒரு சந்தர்ப்பத்தில் 69 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

டி20 தொடரை வென்ற ஆஸி. அணிக்கு புதிய தரவரிசையில் மூன்றாமிடம்

எனினும் 7 ஆவது விக்கெட்டுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் போல் ஸ்டேர்லிங் உடன் இணைந்த ஜோர்ஜ் டொக்ரெல் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிக்க பங்காற்றினர். இருவரும் இணைந்து 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது டொக்ரெல் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறியதை தொடர்ந்து ஏனைய விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து பறிகொடுக்க இறுதியில் அயர்லாந்து அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணியின் இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் போல் ஸ்டேர்லிங் அதிக பட்சமாக 89 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்து வீச்சில் ஆப்கான் அணி சார்பாக முஜிபுர் ரஹ்மான் மற்றும் டவ்லத் ஜத்ரான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் குல்படின் நைப் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜத்ரான் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது ஆப்கான் வீரராக தமது பெயரை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

162 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 41.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை சுவைத்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குல்படின் நைப் 46 ஓட்டங்களையும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் ஷஸாட் 43 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் 46 ஓட்டங்களையும் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி வீரர் குல்படின் நைப் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர் வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

அயர்லாந்து – 161 (49.2) – போல் ஸ்டேர்லிங் 89, ஜோஜ் டொக்ரெல் 37, முஜிபுர் ரஹ்மான் 13/3, டவ்லத் ஜத்ரான் 35/3, குல்படின் நைப் 20/2

ஆப்கானிஸ்தான் – 165/5 (41.5) – குல்படின் நைப் 46, மொஹமட் ஷஸாட் 43, போய்ட் ரான்ங்கின் 48/2

முடிவு – ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<