T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு

ICC Men's T20 World Cup 2026

17
Afghanistan squad

2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ரஷீத் கான் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டின் கிரிக்கெட் சபைகள் அறிவித்து வரும் நிலையில், T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (டிச.31) அறிவித்துள்ளது.

15 பேர் கொண்ட இந்த அணியில் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தலைவராகவும், இப்ராஹிம் ஜத்ரான் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபாரூக்கி, சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், சகலதுறை வீரர் குல்பதின் நைப் மற்றும் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஃபாரூக்கி மற்றும் குல்பதின் நைப் ஆகிய இருவரும் கடந்த ஒக்டோபர் மாதம் பங்களாதே{க்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரின் பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் போது தோள்பட்டைக் காயத்திற்குள்ளாகிய நவீன்-உல்-ஹக் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2024 டிசம்பரில் ஜிம்பாப்வேக்கு எதிரான T20I போட்டியில் விளையாடியிருந்தார்.

மேலும், காயத்திலிருந்து மீண்டுள்ள முஜீப் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இளம் வீரர் அல்லாஹ் மாற்று வீரர்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஹ்மத் ஷா சுல்மான்கில் கூறுகையில், கடந்த சில நாட்கள் விவாதங்கள் நடத்தி T20 உலகக் கிண்ணத்திற்காக சிறந்த அணியைத் நாங்கள் தேர்வு செய்திருக்கிறோம். குல்பதின் நைப் பெரிய போட்டிகளுக்கான வீரர். அவரின் வருகை எங்கள் அணிக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்திருக்கிறது. நவீன் உல் ஹக் மீண்டும் அணிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரின் வருகை எங்கள் பந்துவீச்சின் தரத்தை மேம்படுத்தியிருக்கிறது.” என்றார்.

இறுதியாக கடந்த 2024 இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதி வரை ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐசிசி தொடர் ஒன்றில் அந்த அணி அரையிறுதி வரை பயணித்த முதல் சந்தர்ப்பமாகவும் இது இடம்பிடித்தது.

இதேவேளை, இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் ‘D’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணியுடன் கனடா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. அதேபோல, ஆப்கானிஸ்தான் தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி பெப்ரவரி 8ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி விபரம்:

ரஷீத் கான் (தலைவர்), இப்ராஹிம் ஜத்ரான் (துளைத் தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் காப்;பாளர்), மொஹமட் இஷாக், செடிகுல்லா அடல், டார்வி ரசூலி, ஷாஹிதுல்லா கமால், ஹஸ்மத்துல்லா ஒமர்சாய், குல்பதின் நைப், மொஹமட் நபி, நூர் அஹ்மட், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸல் ஹக் ஃபரூக்கி, அப்துல்லா அஹ்மத்ஸாய்.

 

மாற்று வீரர்கள்:

அல்லாஹ் கசன்ஃபர், இஜாஸ் அஹமட், ஜியா உர் ரஹ்மான் ஷரிஃபி.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<