ஜோர்தானிடம் வீழ்ந்த இலங்கைக்கு தொடரில் இரண்டாவது தோல்வி

131

ஜோர்தான் அணிக்கு இரண்டாவது பாதியில் 5 கோல்களை விட்டுக் கொடுத்த இலங்கை இளையோர் மகளிர் அணி, போட்டியில் 7-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்ந்து, ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (AFC) 16 வயதின்கீழ் பெண்களுக்கான கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் தொடரில் தமது இரண்டாவது தோல்வியை பதிவு செய்துள்ளது.

இந்த தகுதிகாண் சுற்றில் குழு A யில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி குவாம், ஜோர்தான், சீனா மற்றும் உஸ்பகிஸ்தான் ஆகிய அணிகளுடன் தமது சொந்த நாட்டில் மோதுகின்றது.

கிருஷாந்தினியின் இரட்டை கோல் வீண்: குவாமிடம் வீழ்ந்தது இலங்கை

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின்…

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தமது முதல் ஆட்டத்தில் இலங்கை அணி குவாம் அணியிடம் 4-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்த நிலையில், இன்று CR&FC மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஜோர்தான் அணியை எதிர்கொண்டது. ஜோர்தான் அணி, உஸ்பகிஸ்தான் அணியுடனான தமது முதல் போட்டியை எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் முடித்திருந்தது.

இலங்கை முதல் பதினொருவர்

சங்கலனி பண்டார, தஷானி ஜயகடு, நிமேஷா பண்டார, செனுரி பண்டார, அமானி சேனாதீர, உத்பலா ஜயகொடி, மலீகா ஷஹானி, ரகுதாஸ் கிருஷாந்தினி, சதுனி குமாரிஹாமி, தசுனி ஹன்சிகா,

போட்டியின் ஆரம்பம் முதல் ஜோர்தான் வீராங்கனைகள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளின்போதும், கோலுக்கு அண்மையில் இருந்து பந்தைத் தடுத்த இலங்கை கோல் காப்பாளர் சங்கலனி பண்டார 15ஆவது நிமிடத்தில் ஜோர்தான் வீராங்கனைகள் கோல் நோக்கி செலுத்திய ப்ரீ கிக்கின்போதும் பந்தை சிறப்பாகத் தடுத்தார்.

30 நிமிடங்கள் கடந்த நிலையில், யாழ் வீராங்கனை ரகுதாஸ் கிருஷாந்தினி ஜோர்தான் வீராங்கனைகள் பலரைத் தாண்டி பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்று கோலுக்கான முயற்சியை எடுக்கையில், எதிரணியின் பின்கள வீராங்கனை மூலம் பந்து தடுக்கப்பட்டது.

போட்டியின் 40ஆவது நிமிடத்தில் இலங்கை வீராங்கனைகள் செலுத்திய கோல் கிக்கின்போது, இலங்கை அணியின் பகுதியின் மத்தியில் இருந்து பந்தைப் பெற்ற ஜோர்தான் வீராங்கனை ஸைனா ஹஸன் பந்தை நேரே வேகமாக இலங்கை கோல் கம்பங்களை நோக்கி உதைந்த அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

மீண்டும் ஆட்டத்தின் முதல் பாதி நிறைவடையும் நிலையில் ஏனாஸ் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்மூலம் லினா ஜோர்தான் அணிக்கான அடுத்த கோலைப் புகுத்தினார்.

முதல் பாதி:  இலங்கை 0 – 2 ஜோர்தான்

இரண்டாவது பாதி ஆரம்பமாகி 6 நிமிடங்கள் கடந்த நிலையில், இலங்கை அணியின் பெனால்டி பகுதியில் ஜோர்தான் அணியினர் இடையே இடம்பெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் ஏனாஸ் அவ்வணிக்காக மூன்றாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

64ஆவது நிமிடத்தில் ஜோர்தான் வீராங்கனைகள் தமக்கிடையிலான பந்துப் பரிமாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்து, இறுதியில் கோல் நோக்கி உதைந்த பந்தை சங்கலனி சிறப்பாகப் பாய்ந்து வெளியே தட்டி விட்டார்.

இலங்கை அணியின் முன்கள வீராங்கனைகள் 70ஆம் நிமிடத்தில் ஜோர்தான் பின்களத்தில் பந்தைப் பெற்று சில பரிமாற்றங்களின் பின்னர் கிருஷாந்தினியிடம் வழங்க, அவர் கோலுக்கு வெளியே பந்தை உதைந்து வாய்ப்பை வீணடித்தார்.

ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் எல்லையின் இடது புறத்தில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை ஏனாஸ் பெற்று கோலுக்குள் செலுத்தி தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றது பார்சிலோனா

லாலிகா கால்பந்து சுற்றின் நான்காவது வாரத்திற்கான போட்டிகள்…

மீண்டும் 3 நிமிடங்களுக்குள் இலங்கை அணியின் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் ஜோர்தான் அணிக்கு ப்ரீ ஒன்றுக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏனாஸ் வேகமாக உதைய சங்கலனி தடுத்தார். பந்து சங்கலனியின் கைகளில் இருந்து வெளியேற, அவ்விடத்திற்கு விரைந்து வந்த சைமா அல்ஹதிதி பந்தை வலைக்குள் தட்டி அணிக்கான நான்காவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

மீண்டும் 82ஆவது நிமிடத்தில் அலீன் ஒரு கோலைப் பெற, 87 ஆவது நிமிடத்தில் மாற்று வீராங்கனையாக களமிறங்கிய சைமா அல்ஹதிதி ஆறாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார். மீண்டும் ஆட்டத்தின் 91ஆவது நிமிடத்தில் ஏனாஸ் அடுத்த கோலையும் பெற்று தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

மறுமுனையில் ஜோர்தான் வீராங்கனைகளின் மேலும் பல முயற்சிகளை கோல் காப்பாளர் சங்கலனி தடுத்தாடினார்.

போட்டியின் நிறைவில் முதல் பாதியின் 2 கோல்கள் மற்றும் இரண்டாவது பாதியின் 5 கோல்கள் என மொத்தம் 7 கோல்களைப் பெற்ற ஜோர்தான் அணி, இலங்கை மங்கையருக்கு எந்தவொரு கோலையும் விட்டுக் கொடுக்காமல் வெற்றியைப் பதிவு செய்தனர்.

முழு நேரம்:  இலங்கை 0 – 7 ஜோர்தான்

கோல் பெற்றவர்கள்

ஜோர்தான் – ஸைனா ஹஸன் 41′, லினா 45+3′, ஏனாஸ் 52′, 79′ & 90′, அலீன் 82′,

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க