சர்ரே அணியுடன் இணையும் சுனில் நரைன்

Vitality Blast 2022

122
Sunil Narine signs with Surrey for T20 Blast

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் சுனில் நரைன் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள வைட்டாலிட்டி பிளாஸ்ட் T20 தொடரில் சர்ரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சுனில் நரைன் இம்மாதம் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இந்த தொடரையடுத்து, வைட்டாலிட்டி பிளாஸ்ட் T20 தொடரில் சர்ரே அணியுடன் இணைந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>> துடுப்பாட்டத்தில் அபாரம் காண்பித்த யாழ். மத்தி ; போராடி வென்றது இந்துக் கல்லூரி

சர்ரே அணிக்கான இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தில், சுனில் நரைன் இணைக்கப்பட்டுள்ளதுடன், முழுமையான தொடரிலும் அவர் அணியுடன் இணைந்திருப்பார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் குறித்து கருத்து பகிர்ந்துள்ள சுனில் நரைன், “வைட்டாலிட்டி பிளாஸ்ட் T20 தொடரில் சர்ரே அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். நான் சர்வதேச அளவில் அதிகமாக விளையாடி அனுபவம் பெறாத தொடர்களில் இதுவும் ஒன்று. இந்த தொடரில் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை வழங்கவும், சர்ரே அணிக்கு கிண்ணத்தை வென்றுக்கொடுப்பதும் தான் எனது இலக்கு” என்றார்.

சுனில் நரைன் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 51 T20I போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், மொத்தமாக 391 T20 போட்டிகளில் விளையாடி 429 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<