அணித் தலைமையில் இருந்து டி வில்லியர்ஸ் இராஜினாமா

338
Image Courtesy - Getty Image

கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவின் T-20 மற்றும் டெஸ்ட் அணிகளின் தலைவர் பதிவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஏபி டி வில்லியர்ஸ், அவ்வணியின் ஒருநாள் அணித் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக நேற்று (23) அறிவித்தார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஏபி டி வில்லியர்ஸ் உலக கிரிக்கெட்டில் நேர்த்தியான, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 360 பாகை வீரர் என்று கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நட்சத்திரமாகத் திகழ்கின்றார்.

வெறும் 42 பந்தில் சதம் அடித்து புதிய மைல்கல்லை எட்டிய அப்ரிடி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடித் துடுப்பாட்ட வீரருமான சஹீட்..

எனினும், தொடர் உபாதை மற்றும் போதியளவு திறமைகளை அண்மைக்காலமாக வெளிக்காட்டாத டி வில்லியர்சை டெஸ்ட் குழாமிலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. அத்துடன், அவருடைய டெஸ்ட் மற்றும் T-20 தலைமைப் பதவியையும் பாப் டு ப்ளெஸிஸுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்திருந்தது.

டெஸ்ட் போட்டிகளில் தனது நிலைப்பாடு குறித்து இதர வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதில் டி வில்லியர்ஸ் தனது சுயநலத்துக்காக டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகக்கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தைப் பேணுவதற்கு டி வில்லியர்ஸ் போன்ற வீரர்கள் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த முன் உதாரணமாக இருப்பார் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

எனினும், கடந்த 18 மாதங்களாக உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த டி வில்லியர்ஸ் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் மீண்டும் விளையாடியிருந்தார். அதனையடுத்து கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியை டி வில்லியர்ஸ் வழிநடாத்திய போதிலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் தோல்வியைத் தழுவியதால் அவர்களால் அரையிறுதிக்கு தகுதிபெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

33 வயதான டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்க அணியின் தலைவராக சுமார் 6 வருங்களாக (2012-2017) செயற்பட்டுள்ளதுடன், 103 போட்டிகளுக்கு தலைவராக இருந்து அணியை வழிநடாத்தியுள்ளார். அதில் 59 போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து உபாதை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் டி வில்லியர்ஸ் நேற்று வெளியிட்டுள்ள விசேட கணொளியில், ஒருநாள் போட்டிகளுக்கான தலைமைப் பதவியிலிருந்தும் விலகுவதாகவும், தென்னாபிரிக்காவுக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், கடந்த ஒரு வருட காலமாக எனது தலைமைப் பதவி குறித்து பெரிதும் பேசப்பட்டது. ஊடகங்களும் ஏராளமான செய்திகளை வெளியிட்டிருந்தன. எனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க இதுவே சரியான தருணம் எனக் கருதுகிறேன்.

2004ஆம் ஆண்டிலிருந்து தென்னாபிரிக்காவுக்காக 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வின்றி விளையாடி வருகின்றேன். கடந்த காலங்களில் எனது பணிகளை திறம்படச் செய்வதற்கு முயற்சித்திருக்கிறேன். தற்போதைய நிலையில் மனதளவிலும், உடலளவிலும் நான் மிகவும் கலைப்படைந்துள்ளதாக எண்ணுகிறேன். எனக்கு இப்போது மனைவி, இரு குழந்தைகள் என்று ஒரு குடும்பம் உள்ளது. அவர்களுடன் அதிகளவு நேரத்தை செலவிட எதிர்பார்த்துள்ளேன்.

எனினும், அண்மைக்காலமாக டெஸ்ட் மற்றும் T-20 போட்டிகளின் தலைவராக டூ ப்ளெஸிஸ் சிறப்பாக அணியை வழிநடாத்திச் செல்கின்றார். அதை மனதில் வைத்துதான் ஒருநாள் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்து, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையிடமும் எனது இராஜினாமா குறித்து அறிவித்தேன்.

கடந்த 6 வருடங்களாக தென்னாபிரிக்க அணியில் தலைவராக செயற்பட முடிந்தமையை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். ஆனால் அப்பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. எனவே புதிய தலைவராக யார் தெரிவு செய்யப்பட்டாலும் எனது முழு பங்களிப்பினையும் வழங்கத் தயாராகவுள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் மீண்டும் கிறிஸ் கெய்ல்

பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட்..

கடந்த காலங்களில் தனது நிலைப்பாடு குறித்து பலரும் கவலை கொண்டு வந்த நிலையில், இனி சிறந்த முறையில் பங்காற்ற தான் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.  

”தற்போது புத்துணர்ச்சியுடன் 100 சதவீத உடற்தகுதியுடன் உள்ளேன். தெரிவுக்குழுவின் பரிந்துரைப்படி இனிவரும் காலங்களில் 3 வகைப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆவலுடன் இருக்கின்றேன்” என்றார்.

வலது கை துடுப்பாட்ட வீரரான டிவில்லியர்ஸ், அதற்கு மேலதிகமாக விக்கெட் காப்பாளராகவும், பந்து வீச்சாளராகவும் செயற்படும் திறமை கொண்டவர். இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 21 சதங்கள் உள்ளடங்கலாக 8,074 ஓட்டங்களையும், 222 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,319 ஓட்டங்களையும், 76 T-20 போட்டிகளில் விளையாடி 1,603 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.