சரித்திரத் தலைவன் மஹேல ஜயவர்தன

156

இலங்கை அணி 257 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்திருந்தது. தென்னாபிரிக்கா தமது இன்னிங்ஸை ஆரம்பித்து ஓட்ட இலக்கை விரட்டிக் கொண்டிருக்கும் போது இலங்கை அணியின் தலைவரான மார்வன் அத்தபத்து உபாதைக்குள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேறுகிறார். அணியின் உப தலைவரான சமிந்த வாஸ் தலைமை பொறுப்பை ஏற்க போட்டி மீண்டும் ஆரம்பமானது. 

வெற்றிக்காக 257 ஓட்டங்களை விரட்டியடிக்க வேண்டிய நிலையில் தென்னாபிரிக்கா 19 ஓவரில்  76 ஓட்டங்களிற்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து மிகவும் வலுவான நிலையில் இருந்தது 

தலைவராகவும், பயிற்சியாளராகவும் சாதித்துக் காட்டிய மஹேல ஜயவர்தன

இலங்கை அணியின் நிர்வாகத்திற்கும் அத்தபத்துவிற்கும் போட்டி கை நழுவி செல்வது புரிய ஆரம்பித்தது. ஏதாவது செய்தாக வேண்டும். உடனே மைதானத்தில் இருந்த மஹேல ஜயவர்தனவை அழைத்து ”தலைமை பொறுப்பை ஏற்றுகொள்கிறீர்களா?” என வினவ, பதிலுக்கு மஹேல, ”வாஸ் அனுமதித்தால் நான் பொறுப்பேற்கிறேன்” என கூறினார்.  

சமிந்த வாஸ் சம்மதித்தார். மஹேல அணித் தலைவராக பொறுப்பேற்கிறார். அதன் பின் நடந்தது ஓர் வரலாறு! இலங்கை அணி 76 ஓட்டங்களால் அப்போட்டியில் வெற்றிபெற்றது. 

2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மஹேல இலங்கை அணியின் முழுநேர அணித் தலைவராக பொறுப்பேற்பதற்கான விதை போடப்பட்டது. எனினும், அதற்கு முன் இருந்த அணித் தலைவர்கள் உபாதைக்குள்ளாகும் போதெல்லாம் மஹேலவே அணித்தலைவராக செயற்பட்டார்.  

சந்தர்ப்ப சூழ்நிலையால் இலங்கை அணியின் தலைமை பதவியை பொறுப்பேற்ற மஹேல, பின்னைய நாட்களில் இலங்கை அணி கண்ட மிகச் சிறந்த தலைவராக மாறினார். தலைமைத்துவம் என்று வரும் போது அனைத்து தரப்பிலும் பேசப்படும் ஒரு வார்த்தை தான் “Captain Cool”. ஆனால் இப்பதத்திற்கு முற்றிலும் மாற்றமான ஒரு தலைவர் தான் மஹேல ஜயவர்தன.  

தவறான முடிவுகள் நடுவர்களால் வழங்கப்படும் போது, எதிரணி வீரர்கள் இலங்கை வீரர்களை வம்பிற்கு இழுக்கும் போதெல்லாம் முதலாவதாக  நின்று அவர்களை விரல் நீட்டி கேள்வி கேட்பவராகவும், விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் துல்லியமான களத்தடுப்பு யுக்திகளை மேற்கொள்பவராகவும், சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதிலும் மஹேல தலை சிறந்தவராக காணப்பட்டார். இதற்கு ஓரிரு உதாரணமல்ல. சொல்லிக்கொண்டே போகலாம். 

மஹேல சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்ததன் பின் தலைமைத்துவத்தை கற்றுகொண்டவர் அல்ல. தலைமைத்துவம் அவரது DNA இன் ஓர் அங்கம். அவர் இரத்தத்தில் RBC, WBC போன்ற கூறுகளுடன் இணைந்து ஓடும் ஓர் விடயம் தான் தலைமைத்துவம். 

மஹேல தனது பாடசாலை காலங்களில் (1994 காலப் பகுதியில்) கொழும்பு நாலந்த கல்லூரி அணித் தலைவராக செயற்பட்டார். அப்போது பாடசாலை அணியின் பயிற்றுவிப்பாளரின் முழு கவனத்தையும், நன்மதிப்பையும் பெற்றார். போட்டி தொடர்பான அனைத்து திட்டங்களையும் மஹேலவிடம் சொல்வது மாத்திரம் தான் பயிற்றுவிப்பாளரின் பணியாக காணப்பட்டது. ஏனைய அனைத்து விடயங்களையும் மைதானத்தில் மஹேலவே பார்த்துக் கொள்வார். ஒருமுறை மைதானத்திற்குள் நுழைந்துவிட்டால் மஹேல அதன் பின்னர் பயிற்றுவிப்பாளரில் தங்கியிருப்பதில்லை. அனைத்து முடிவுகளையும், தீர்மானங்களையும் தானே முடிவு செய்வார், மேற்கொள்வார்.  

இவ்வாறு சிறுவயது முதலே சிந்தனையாற்றல் மிக்க, தைரியமான, Aggressive ஆன ஒரு தலைவராக மஹேல தன்னை செதுக்கி வந்தார். இதன் விளைவாக 1999 ஆம் ஆண்டு உலக கிண்ண அணியின் உப தலைவராக மஹேலவை நியமனம் செய்தது இலங்கை கிரிகெட் சபை. 1999 ஆம் ஆண்டு அரவிந்த டி சில்வா, அத்தபத்து, சனத், உபுல் சந்தன, ஹதுருசிங்க, களுவிதாரன, மஹாநாம என பல சிரேஷ்ட, அனுபம் வாய்ந்த வீரர்கள் காணப்பட்ட போதும் கூட அணியில் இணைந்த இரண்டே ஆண்டுகளில் மஹேல உப தலைவராக்கப்பட்டார். 

மஹேல உலகின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனை அவருடைய அடைவுகளே தெளிவாக கூறும். வெற்றி விகிதங்களின் அடிப்படையில் பார்த்தால் இலங்கையின் சிறந்த தலைவர் மஹேல ஜயவர்தன தான். டெஸ்ட் போட்டிகளில் 47.36 என்ற வெற்றி வீதத்திலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 59.09 என்ற வெற்றி வீதத்திலும் போட்டிகளை வெற்றிகொண்டுள்ளார். உலக கிண்ண வெற்றியை வழங்கிய அர்ஜுன ரணதுங்க வெற்றி விகிதத்தில் மஹேலவிற்கு அடுத்ததாக உள்ளார். 

கிரிக்கெட்டின் சாதனை பொக்கிஷம் குமார் சங்கக்கார

அதேபோன்று, உலகக் கிண்ணங்களில் 72.3 எனும் வெற்றி வீதத்தையும், T20 உலக கிண்ணங்களில் 59.9 எனும் வெற்றி வீதத்தையும் கொண்டுள்ளார். மஹேல ஜயவர்தன தலைவராக இருந்த 2006 – 2012 வரையேயான காலப் பகுதியில் மாத்திரம் பார்த்தால் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், T20 போட்டிகளில் வெற்றி விகிதத்தில் மஹேல ஜயவர்தன நான்காவது இடத்தில் இருக்கிறார். இவ்வாறு  உலகின் சிறந்த அணித் தலைவர்களுடன் ஒப்பிடுமளவு மஹேல சிறந்த அடைவுகளையே கொண்டுள்ளார்.  

எனினும், மேலே கூறியது போன்ற அடைவுகளை வைத்து மஹேலவின் தலைமைத்துவத்தை எடை போட முடியாது. மஹேல அடைவுகள், புள்ளிவிபரங்களை கொண்டு எடை போட கூடிய ஒரு தலைவர் அல்ல. அடைவுகள் புள்ளிவிபரங்களை தாண்டிய ஆளுமை தான் மஹேலவிடம் நாம் கண்டது. 

இலங்கையின் அணித் தலைவர்களுள் அதிகூடிய வெற்றி வீதத்ததை கொண்ட ஒரு தலைவர்தான் மஹேல. எனினும் இந்த வெற்றி வீதத்தை ஒரு பக்கம் வைத்து விட்டு  மஹேல கொண்டிருக்கும் சிறந்த தலைமைத்துவ பண்புகள் குறித்து பேசியே ஆக வேண்டும்! 

2006ஆம் ஆண்டு அணியின் தலைமைத்துவத்தை ஏற்று குறிப்பிட்ட காலம் அணித்தலைவராக செயற்பட்டார். பின்னர் தானாகவே தலைமைத்துவத்தை துறந்து விட்டு சென்றார். அதன்பின் சங்காவை தொடர்ந்து டில்ஷான் அணியின் தலைமை பதவியை பெற்றார்.

டில்ஷானின் தலைமைத்துவத்தில் இலங்கை அணி படுமோசமான அடைவுகளையே பெற்றது. டில்ஷானின் தலைமையில் 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியை தான் இலங்கை வெற்றி கொண்டது. இதனால், இலங்கை அணியை சிறந்ததொரு தலைவரின் கைகளில் வழங்க இலங்கை கிரிகெட் சபை முன்வந்தது. இரண்டாம் முறை மஹேல அணித்தலைவரானார். 

டில்ஷானின் தலைமையின் கீழ் இலங்கை அணி சறுக்க காரணமாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மஹேல, அவை அனைத்தையும் நிவர்த்தி செய்தார். மஹேல இளம் வீரர்களின் கருத்துக்களிற்கு மதிப்பளித்தார். அவர்களது திட்டங்கள், யோசனைகள் சரியென தென்பட்டால் அவற்றை நடைமுறைபடுத்தவும் மஹேல தயங்கியதில்லை. இதே யுக்தியை தான்  மஹேல இரண்டாம் முறை தலைவரான போதும் பயன்படுத்தினார். 

டில்ஷானின் தலைமையின் கீழிருந்த 9 மாதங்களில் படுதோல்விகளை மாத்திரம் கண்டு கொண்டிருந்த அணி 2012 ஆம் ஆண்டின் CB Series  இன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 8 போட்டிகள், அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை என மூன்று அணிகள். இவற்றுள் இரண்டு அணி  இறுதிப் போட்டிக்குச் செல்லும். அவுஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தெரிவாகிவிட்டது. இலங்கை  முன்னிலையில் இருக்கிறது! 

இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லவேண்டுமாயின் இலங்கை அணியுடன் இடம்பெறவிருக்கும் போட்டியில் வெற்றிபெற வேண்டும். அதன் பின் இலங்கை அணி தமக்கு அவுஸ்திரேலியாவுடன் இருக்கும் போட்டியில் தோல்வியடைய வேண்டும். இலங்கை இந்திய அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமானது. இலங்கை 320 ஓட்டங்களை நிர்ணயித்தது. அதனை இந்தியா 37 ஓவர்களில் விரட்டியடித்தது. இது மஹேல இரண்டாம் முறை தலைமையேற்ற பின் நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வு. இப்போது இந்தியா இலங்கை புள்ளியில் சமநிலையில் இருக்கின்றன. அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவிருக்கும் போட்டியில் வெற்றிபெற்றால் இறுதி போட்டிக்கு இலங்கை தெரிவாகும். 

இந்தியாவுடனான மிக பாரதூரமான, படுமோசமான தோல்வியின் பின் இலங்கை அணி மீண்டு வந்து அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு சென்றது. இதுதான் மஹேல வளர்த்த அணி, இது தான் மஹேல ஒரு தலைவராக செதுக்கிய அணி. எப்போதும் போராட்ட குணம் கொண்ட அணியை உருவாக்கவே மஹேல ஆசைப்பட்டார். அவ்வாறான ஒரு அணியையே அவர் உருவாக்கினார். மஹேலவின் குணமும் அது தான். 

“மஹேல எப்போதும் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவே விரும்புவார். எப்போதும் அடித்தாடவே முயல்வார். அது எவ்வாறான ஆடுகளமாக இருந்தாலும் அதை பொருப்படுத்த மாட்டார். எவ்வளவு திடமான பந்துவீச்சாளர்களை கொண்ட அணியாக இருந்தாலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவே விரும்புவார்” என்று சங்கா மஹேல தொடர்பாக கூறியிருக்கிறார்.  இந்த பண்பு தான் ஒரு சிறந்த அணி உருவாக காரணமாக அமைந்தது. 

மஹேல உலகக் கிண்ணங்களையோ, T20 உலக கிண்ணங்களையோ இலங்கை அணிக்கு பெற்றுத் தரவில்லை. எனினும் அவற்றை பெற்றுகொள்ள கூடிய ஒரு அணியை உருவாக்கினார். அவற்றை பெற்றுகொள்ள எம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வீரர்கள் மத்தியில் விதைத்தார். 2007 இல் ஒரு அணித் தலைவராக இலங்கை அணியை உலக கிண்ணம் அழைத்து சென்றார். பின்னர் அவர் உருவாக்கிய அணி 2011 இல் உலக கிண்ண இறுதிப் போட்டியில் ஆடியது. அதுபோல் 2014 T20 உலக கிண்ணத்தில் ஆடி அதை வெற்றிபெற்று மஹேலவிற்கு சிறந்ததொரு பிரியாவிடையையும் வழங்கியது.   

“The greatest leader is not necessarily the one who does the greatest things. He is the one that gets the people to do greatest things” 

                                                   – Ronald Reagan 

சிறந்த தலைவர் சிறந்த விடயங்களைச் செய்ய வேண்டும் என்பது இல்லை. அவர் மற்றையவர்களை சிறந்த விடயங்கள் செய்ய வைப்பவராக இருப்பார். 

ரொனால்ட் ரீகன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<