இலங்கை கால்பந்து வரலாற்றில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, நாட்டின் பிரதான உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டிகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ‘டயலொக் ப்ளே’ (Dialog Play) டிஜிட்டல் நேரலைத் தளம் ஆகியன கைகோர்த்துள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையின் கீழ், சுப்பர் லீக்கின் அனைத்து 81 போட்டிகளும் Dialog Play மொபைல் செயலி வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன. இதன் மூலம் இலங்கை முழுவதிலும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் போட்டிகளை உடனுக்குடன் நேரலையாகக் கண்டு மகிழவும், தமக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவளிக்கவும் முடியும்.
இலங்கை கால்பந்து இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், சூப்பர் லீக் தொடரின் பெறுமதி, வரவேற்பு மற்றும் பிரபல்யத்தை உயர்த்துவதற்கு இக்கூட்டாண்மை ஒரு முக்கிய மைல்கல் எனக் குறிப்பிட்டார்.
“இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியும் நன்றியும் அடைகிறோம். இந்த ஒத்துழைப்பு வீரர்கள், கழகங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக கால்பந்தாட்டத்தைப் பார்க்கவும், விளையாடவும், ரசிக்கவும் இது ஊக்குவிக்கும். எமது உள்நாட்டுப் போட்டிகளை அனைவரும் இலகுவாகப் பார்வையிடும் வகையில் கொண்டு சேர்ப்பதன் மூலம், நாடு முழுவதும் கால்பந்து விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கான மற்றொரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
>>Photos – Official Launch – Dialog Play Super League 2026<<
கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை தேசிய கால்பந்து அணி அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் கால்பந்து விளையாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டிய சம்மேளனத்தின் தலைவர், இந்த உத்வேகத்தைத் தொடர்வதில் தொடர்ச்சியான முதலீடுகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மூலோபாயக் கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இதுதொடர்பில் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் ஊடக மற்றும் வீடமைப்புப் பிரிவின் துணைத் தலைவர் புபுது அலுத்கெதற கருத்து தெரிவிக்கையில், “இந்தக் கூட்டாண்மையானது இரு நிறுவனங்களுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. Dialog Play செயலி மூலம் விறுவிறுப்பான கால்பந்தாட்டப் போட்டிகளை நேரடியாக ரசிகர்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கே கொண்டு சேர்க்கவும், அவர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் தேவையான நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன,’ என குறிப்பிட்டார்.
சுப்பர் லீக் என்பது இலங்கையின் முதன்மையான உள்நாட்டு கால்பந்துப் போட்டியாகும். இதில் முதல் சுற்று மற்றும் சுப்பர் சிக்ஸ் சுற்று என ரவுண்ட்-ரொபின் முறையில் 10 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 81 போட்டிகளைக் கொண்ட இந்தப் போட்டித் தொடர், நாட்டின் முன்னணி கழகங்களும், வீரர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் உயர்மட்ட உள்நாட்டு மட்டத்தில் போட்டியிடவும் ஒரு தளத்தை வழங்குகிறது.
இக் கூட்டாண்மையின் மூலம் உள்நாட்டுப் போட்டிகளின் வரவேற்பை விரிவுபடுத்துதல், ரசிகர்களின் பங்கேற்பை அதிகரித்தல், கழகங்கள் மற்றும் வீரர்களின் திறமைகளுக்கு வாய்ப்பு அளித்தல் மற்றும் விளையாட்டின் வர்த்தக ரீதியிலான வளர்ச்சிக்கு புதிய கதவுகளைத் திறத்தல் ஆகியவற்றை இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனமும் Dialog Play உம் நோக்கமாகக் கொண்டுள்ளன.
போட்டிகளை நேரடியாக ரசிகர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு செல்லும் இந்த முயற்சியானது,நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ரசிகர்களை ஒன்றுபடுத்தி,இலங்கை கால்பந்தாட்டத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிய முக்கிய நகர்வாக அமைந்துள்ளது.






















