ரினோன் அணியை 3-0 என வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்!

Dialog Play Super League 2026

4

சுப்பர் லீக் கால்பந்து தொடரில் தோல்வியடையாத அணியாக வலம் வரும் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி, ரினோன் அணிக்கு எதிராக மீண்டும் ஒரு வெற்றியை பதிவுசெய்தது. 

கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இலகுவான வெற்றியை அப் கண்ட்ரி லயன்ஸ் அணி பதிவுசெய்தது. 

ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் மத்தியக்களத்திலிருந்து ரினோன் அணியின் கமீல் ஹகீம் தங்களுடைய கோல் காப்பாளரை நோக்கி உதைத்த பந்து துரதிஷ்டவசமாக அவரை கடந்து கோல் கம்பத்துக்குள் நுழைந்தது. இதன்மூலம் எதிரணிக்கு ரினோன் அணி முதலாவது கோலை பெற்றுக்கொடுத்தது. 

சுப்பர் சிக்ஸின் முதல் போட்டியில் ப்ளூ ஸ்டாரை வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்

இதனை தொடர்ந்து இரண்டு அணிகளும் கோல்களுக்கான பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும், வாய்ப்புகளை இரண்டு அணிகளும் கோலாக மாற்றுவதற்கு தவறியிருந்தன. எனவே முதல் பாதி 1-0 என நிறைவுக்கு வந்தது. 

முதல் பாதி – அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க 1 – 0 ரினோன் வி.க 

இரண்டாவது பாதியிலும் இரண்டு அணிகளும் கோல்களுக்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சல் அட்டையை பெற்ற அப் கண்ட்ரி அணியின் மொஹமட் முர்ஷீத் சிவப்பு அட்டையை பெற்று, களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 

தொடர்ந்து ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து அற்புதமாக பரிமாற்றிய பந்தினை ஹெடர் செய்து நவீன் ஜூட் அப் கண்ட்ரி அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார். 

இதன் பின்னர் ஆட்டத்தின் 64ஆவது நிமிடத்தில் எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்தியதுடன், தொடர்ந்து அவருடன் முரண்பட்டுக்கொண்ட ரினோன் அணியின் மத்தியக்கள வீரர் முஹமட்சஹீலுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. எனவே இரண்டு அணிகளும் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

எனினும் 67ஆவது நிமிடத்தில் மொஹமட் ஆகிப் மத்தியக்களத்திலிருந்து எடுத்துச்சென்று, தட்டிக்கொடுத்த பந்தை பெஞ்சமின் யோர்க் கோலுக்குள் புகுத்தி அணியின் முன்னிலையை 3-0 என மாற்றினார். 

ரினோனை வீழ்த்தி 9 வெற்றிகளுடன் சுப்பர் 6 சுற்றில் அப்கண்ட்ரி லயன்ஸ்

தொடர்ந்து ரினோன் அணி முயற்சிகளை மேற்கொண்டாலும், பந்தினை தக்கவைக்க தவறியதுடன், கோல் வாய்ப்புகளையும் பெறவில்லை. எனவே 3-0 என்ற கோல்கள் கணக்கில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 

  • முழு நேரம் – அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க 3-0 ரினோன் வி.க 
  • கோல் பெற்றவர்கள் – கமீல் ஹகீம் (6’ OG), நவீன் ஜூட் 63’, பெஞ்சமின் யோர்க் 67’ 

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<