இந்தியா மற்றும் இலங்கையில் ஆகிய நாடுகளில் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் நடைபெறும் ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான அவுஸ்திரேலியாவின் இறுதி 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
துடுப்பாட்ட சரிவினால் முதல் போட்டியில் இலங்கைக்கு தோல்வி
அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் முதுகு உபாதையின் காரணமாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். இந்த நிலையில் அவருக்குப் பதிலாக பென் டுவார்ஷுயிஸிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான உத்தேச அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பிடித்திருந்த மேட் ஷோர்ட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மெதிவ் ரென்ஷாவ் அணியில் இணைந்துள்ளார்.
மெதிவ் ரென்ஷாவைப் பொறுத்தவரை, அவர் சமீபகாலமாக அனைத்து வடிவ போட்டிகளிலும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். இலங்கையின் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில், மத்திய வரிசை வீரராக அவர் பிரகாசிப்பார் என நம்பப்படுகின்றது.
அதேநேரம் அண்மையில் நிறைவுக்கு வந்த பிக் பேஷ் லீக் (BBL) தொடரில் 167.97 என்ற சிறப்பான Strike Rate உடன் 299 ஓட்டங்கள் வரை குவித்த போதிலும், ஸ்டீவ் ஸ்மித்திற்கு உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா தனது முதல் T20 உலகக் கிண்ணப் போட்டியை பெப்ரவரி 11ஆம் திகதி கொழும்பில் அயர்லாந்துடன் ஆடுகின்றது. அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 13ஆம் திகதி ஜிம்பாப்வேயையும், பெப்ரவரி 16 இலங்கையையும், பெப்ரவரி 20 ஓமானையும் எதிர்கொள்கிறது. தற்போது அவுஸ்திரேலிய அணி T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தானில் T20 தொடரில் விளையாடி வருகிறது.
அவுஸ்திரேலியாவின் T20 உலகக் கிண்ண குழாம்:
மிச்செல் மார்ஷ் (தலைவர்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொன்னொலி, டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், கேமரூன் கிரீன், நதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வூட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மெதிவ் குஹ்னமன், கிளென் மெக்ஸ்வெல், மெதிவ் ரென்ஷாவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அடம் ஷம்பா.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















