ஆஷஸ் தொடர் 2025: முதல் டெஸ்டில் ஸ்மித்திற்கு தலைமைப் பொறுப்பு

153
PAT CUMMINS - STEVE SMITH

இங்கிலாந்துக்கு எதிரான 2025ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து, அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவரான பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

>>2026 T20 உலகக் கிண்ணத் தொடருக்காக LPL 2025 ஒத்திவைப்பு<<

இதனால் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பொறுப்பு ஸ்டீவ் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (CA) அறிவித்துள்ளது.

பேட் கம்மின்ஸ் கடந்த ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து ஓய்வில் உள்ளார். கம்மின்ஸிற்கு காயம் குணமடைந்து பந்துவீசுவதற்குத் தேவையான கால அவகாசம் இல்லாத நிலையினால், எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி பேர்த் நகரில் ஆரம்பமாகவுள்ள முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அண்ட்ரூ மெக்டொனால்ட் கருத்து தெரிவிக்கையில், “கம்மின்ஸின் உடல்நிலையை மேம்படுத்த எங்களுக்குக் கால அவகாசம் போதவில்லை. ஆனாலும், அவர் இந்த வாரம் மீண்டும் பந்துவீசத் தொடங்குவார். அவர் டிசம்பர் 4ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்று கம்மின்ஸின் உபாதை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதேநேரம் கம்மின்ஸின் இடத்திற்கு வேகப்பந்துவீச்சாளரான ஸ்கொட் போலண்ட் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலண்ட் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 12.63 என்ற பந்துவீச்சு சராசரியைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் 25 வரை பேர்த்  நடைபெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<