இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜ் விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட T20I மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட T20I தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவும், 2ஆவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்று தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ், காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடரில் இருந்து விலகியுள்ளதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சபை நேற்று (12) அறிவித்தது.
- அயர்லாந்து, தென்னாபிரிக்க தொடர்களுக்கான இங்கிலாந்து T20i குழாம்கள் அறிவிப்பு
- மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் வெளியீடு
- ஆசியக்கிண்ண குழாத்தில் இணையும் ஜனித் லியனகே!
இதன்படி, கடைசியாக 2024 செப்டம்பரில் T20I போட்டியில் விளையாடிய 30 வயதான இடதுகை சுழல்பந்து வீச்சாளர் பிஜோர்ன் ஃபோர்டுயின் (Bjorn Fortuin) அவருக்குப் பதிலாக பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னதாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடியும் காயம் காரணமாக T20I தொடரில் இருந்து விலகியதுடன், அவருக்குப் பதிலாக நண்ட்ரே பர்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தென்னாப்பிரிக்க வீரர்கள் குணமடைந்து அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தீர்மானமிக்க 3ஆவதும், இறுதியுமான T20I போட்டி நாளை (14) நொட்டிங்ஹமில் நடைபெறவுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<