அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு மீண்டும் பயிற்சியாளராகும் புபுது தசநாயக்க

USA Cricket

14
pubudu

இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

54 வயதான புபுது தசநாயக்க 2ஆவது தடவையாக அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். முன்னதாக இவர் கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றியிருந்தார். 2019 இல் அமெரிக்க கிரிக்கெட் அணி ஐசிசி இன் ஒருநாள் போட்டி அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வதற்கும், சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும் அவர் மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

ஐசிசி இணை உறுப்பு நாடுகளுக்கான பயிற்சியாளராகப் பணியாற்றி ஒரு பயிற்சியாளராக பல்வேறு சாதனைகளையும் படைத்தார். இதில் நேபாளம் மற்றும் கனடா ஆகிய கிரிக்கெட் அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக புபுது தசநாயக்க பதவி வகித்ததுடன், அவரது பயிற்றுவிப்பின் கீழ், கனடா அணி கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற வாய்ப்பையும் முதல் தடவையாகப் பெற்றுக்கொண்டது. அதேபோல, அவரது பயிற்றுவிப்பின் கீழ் தான் கனடா அணி 2023இல் ஐசிசி ஒருநாள் போட்டி அந்தஸ்தையும் மீண்டும் பெற்றது.

இதனிடையே, 2011இல் கனடா அணி ஒருநாள் உலகக் கிண்ணத்தில் கடைசியாக விளையாடிய போதும், 2014இல் நேபாளம் அணி முதல் T20 உலகக் கிண்ணத்தில் விளையாடிய போதும் புபுது தசநாயக்க தான் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை குறித்து புபுது தசநாயக்க கருத்;து தெரிவிக்கையில், ‘அமெரிக்க ஆண்கள் தேசிய அணியை மீண்டும்; வழிநடத்த கிடைத்தமை மிகப்பெரிய கௌரவம். நான் இங்கு முன்னர் பணியாற்றிய காலத்தில் சாதித்தவற்றைப் பற்றி பெருமைப்படுகிறேன். மேலும், இந்த அணியில்; இன்னும் உயர்ந்த சாதனைகளை நிகழ்த்துவதற்கான அபார திறன் இருப்பதை நான் காண்கிறேன்.அமெரிக்க கிரிக்கெட்டுக்காக அர்த்தமுள்ள ஒன்றை தொடர்ந்து உருவாக்க வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,’ என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்கு அமெரிக்கா அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், புபுது தசநாயக்க தனது முந்தைய வெற்றியைக் கட்டியெழுப்பி உலகக் கிண்ணத்தில் அணியை வழிநடத்த இலக்கு வைத்துள்ளார்.

ஒரு வீரராக, தசநாயக்க 1990 களின் பிற்பகுதியில் இலங்கைக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்னர் கனடாவுக்கு குடிபெயர்ந்து, அங்கு கனடா தேசிய அணிக்காக விளையாடி தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<