சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் அவுஸ்திரேலிய அணியானது ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கெரி ஆகியோரின் சதங்களோடு முதல் இன்னிங்ஸில் பலம் பெற்றுள்ளது.
காலியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில் இலங்கை அணியானது 229 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இலங்கை அணிக்காக களத்தில் காணப்பட்ட குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும், லஹிரு குமார ஓட்டங்கள் ஏதுமின்றியும் காணப்பட்டனர்.
போட்டியின் இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணி 97.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணிக்காக துடுப்பாடிய வீரர்களில் குசல் மெண்டிஸ் 85 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காது நின்றார்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக நதன் லயன், மெதிவ் குஹ்னமேன் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த அவுஸ்திரேலிய அணி சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற தடுமாறிய போதிலும், அவ்வணியின் மூன்றாம் நான்காம் விக்கெட்டுக்காக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கெரி ஆகிய மதிய போசணத்தின் பின்னர் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இரண்டு வீரர்களும் சிறந்த முறையில் செயற்படத் தொடங்கியதோடு தங்களது விக்கெட்டுக்களையும் பறிகொடுக்காமல் சதங்களையும் விளாசினர். இதன் காரணமாக அவுஸ்திரேலிய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் 330 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. களத்தில் ஆட்டமிழக்காதிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் 120 ஓட்டங்களையும், அலெக்ஸ் கெரி 139 ஓட்டங்களையும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.