பாரா ஈட்டி எறிதலில் உலக சாதனையை தவறவிட்ட சமித்த

National Para Athletics Championship 2022

285
Samitha Dulan

துலான்டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த சமித்த துலான், இன்று (29) நடைபெற்ற தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல் போட்டியில் 66.60 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை தூரத்தைக் கடந்து அசத்தினார்.

இலங்கை பாராலிம்பிக் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்று (28) கொழும்பு சுகததாச அரங்கில் ஆரம்பமாகியது.

இம்முறை தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் சுமார் 450 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குபற்றியுள்ளனர்.

இந்த நிலையில், போட்டிகளின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான இன்று (29) நடைபெற்ற ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட சமித்த துலான், 66.60 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

சமித்தவின் குறித்த பெறுபேறானது உலக சாதனையாக கருதப்பட்டாலும், உலக பாரா ஒலிம்பிக் சங்கத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளதாக ஒரு போட்டித் தொடராக இது அமைந்தால் அவரது பெறுபேறு உலக சாதனையாக கருத்தில் கொள்ளப்படவில்லை.

இதுதொடர்பில் இலங்கை பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உயர் அதிகாரியொருவர் ThePapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில், சமித்த துலானின் பெறுபேறானது உலக சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும், அவ்வாறு உலக சாதனையாக ஏற்றுக்கொள்ள சர்வதேச பாராலிம்பிக் சங்கத்தின் அனுதியைப் பெற்ற தொடராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல் போட்டியில் 66.29 மீட்டர் தூரத்தை எறிந்து

அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் புரியன் நிலைநாட்டிய உலக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் புரியனுக்கு சமித்த துலான் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தார். எனினும், 65.61 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்த சமித்த துலானுன் வெண்கலப் பதக்கம் வென்று ஆறுதல் அடைந்தார்.

இலங்கை இராணுவ பொலிஸ் படைப்பிரிவு சார்பில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற 32 வயதுடைய சமித்த துலான் கணுக்கால் செயலிழந்தவராகக் காணப்படுகின்றார்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<