இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணையில் மாற்றம்

Sri Lanka tour of India 2022

5451

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் T20i மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20i தொடரிலும், இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கெதிரான T20i தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரை முடித்த பிறகு இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் அதனைத் தொடர்ந்து 3 T20i போட்டிகளில் விளையாடவிருந்தது.

முன்னதாக டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் என்று அட்டவணை வெளியிட்டாலும், இலங்கை கிரிக்கெட் சபையின் கோரிக்கையை ஏற்று முதலில் T20i தொடர் நடைபெறும் வண்ணம் அட்டவணை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஏனெனில், இலங்கை அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிறகு நேரடியாக இந்தியா சென்று T20i போட்டிகளில் ஆடுவது பயோ-பபுள் சிக்கல்களை தவிர்க்க முடியும் என்பதனால் இவ்வாறு போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, 3 போட்டிகள் கொண்ட T20i தொடரானது எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும்.

T20i போட்டிகளில் முதல் போட்டி லக்னோவிலும், அடுத்த 2 போட்டிகள் தரம்சாலாவிலும் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது

இதேபோன்று, முதல் டெஸ்ட் போட்டியானது, மொஹாலியில் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நடைபெறும். 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, பெங்களூருவில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<