100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பு

100th National Athletics Championship

129

அடுத்த மாதம் தியகமவில் நடைபெறவுள்ள 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க தெற்காசிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100வது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (29) கொழும்பு CR&FC வளாகத்தில் இடம்பெற்றது.

>>Photos – Centenary Symposium & Centenary National Champions | Press Conference

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பிரேமா பின்னவல, உப தலைவர் ஜி.எல்.எஸ் பெரேரா, SLT MOBITEL இன் கொழும்பு பிராந்திய தலைவர் டேனம் பெரேரா மற்றும் விளம்பர முகாமையாளர் கெலும் குலதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் மற்றும் அடுத்த மாதம் தியகமவில் நடைபெறவுள்ள 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் குறித்து மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

‘100 ஆண்டுகளைக் கடப்பது என்பது எந்தவொரு நிறுவனத்திற்கும், எந்தவொரு மனிதனுக்கும் எளிதான விடயம் அல்ல. ஒரு விளையாட்டு சங்கமாக ஆசியாவிலேயே 100 ஆண்டுகளை நிறைவு செய்த மூன்றாவது நாடு நாங்கள் தான். ஜப்பானும், கொரியாவும் மட்டுமே எங்களுக்கு முன்னால் உள்ளன.

உலக மெய்வல்லுனர் சங்கத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட நாடுகள் வரிசையில் நாங்கள் 40ஆவது இடத்தில் இருக்கிறோம், அதேபோல, உலக மெய்வல்லுனர் சங்கத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட முதல் தெற்காசிய நாடும் இலங்கை தான்.

இதனிடையே, எமது நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை ஏப்ரல் 08, 09 மற்றும் 10ஆம் ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் விழா, பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்களுக்கு எமது வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தொடராக இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமையவுள்ளது.

அதுமாத்திரமின்றி, 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க தெற்காசிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

இதன்படி, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், சுகததாச மைதானத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் தியகம

மைதானத்திற்கு தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை மாற்றவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே, தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தின் சுவட்டு பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் இரண்டாவது மெய்வல்லுனர் தொடர் இதுவாகும்.

இதேவேளை, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இதுவரை 520 உள்ளூர் வீரர்களும், 20 வெளிநாட்டு வீரர்களும் தங்களது பெயர்களை பதிவுசெய்துள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கருத்தரங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் ஏப்ரல் 07ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 400 பேரின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ள இந்த கருத்தரங்கில் ஒலிம்பிக்கில் பங்குகொண்ட மெய்வல்லுனர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் மெய்வல்லுனர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, குறித்த நிகழ்வு இடம்பெறுகின்ற மாலை தெற்காசிய மெய்வல்லுனர் சங்கத்தின் விசேட அமர்வும் இடம்பெறவுள்ளது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<