5ஆவது முறையாக கோலூன்றிப் பாய்தல் சாதனையை முறியடித்தார் சச்சினி

2nd Selection Trial ahead of Asian Games 2022

191

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் இராணுவப் படையைச் சேர்ந்த சச்சின் பெரேரா, பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.70 மீட்டர் உயரம் தாவி புதிய இலங்கை சாதனை படைத்தார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சம்பியனான இவர், இதுவரை ஐந்து தடவைகள் இலங்கை சாதனையை முறியடித்துள்ளார். இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் 3.65 மீட்டர் உயரம் தாவி இலங்கை சாதனை நிகழ்த்தியிருந்தார்.

குறித்த போட்டியில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த லக்ராணி. பெரேரா (3.50 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், யாழ் வீராங்கனை என். டக்சிதா (3.40 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் நடைபெற்று வருகின்ற மெய்வல்லுனர் போட்டிகளில் வடக்கைப் பிரநிதித்துவப்படுத்தி தொடர்ச்சியாகப் பங்குகொண்டு வெற்றிகளை ஈட்டி வருகின்ற டக்சிதா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் பங்குகொண்டார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.40 மீட்டர் உயரத்தைத் தாவிய அவர், வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவது அத்தியாயம் இன்று (11) தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.

மட்டுப்படுத்தப்பட்ட வீரர்கள் மாத்திரம் பங்குகொண்ட இந்த தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட சுமேத ரணசிங்க, 81.79 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்ததன் மூலம் ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதியைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியில் சுமேத ரணசிங்க 2015ஆம் ஆண்டு இலங்கை சாதனை (83.04 மீட்டர்) நிகழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

200 மீட்டரில் சபான் ஆதிக்கம்

ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இளம் குறுந்தூர ஓட்ட வீரரான மொஹமட் சபான், 21.19 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பிடித்தார்.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட சபான், 21.35 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடம் பிடித்தார். அதேபோல, குறித்த போட்டியில் பங்குகொண்ட மொஹமட் நௌஷாத் மூன்றாவது இடத்தைப் பிடித்தாலும் அவருக்கு இறுதிப் போட்டிக்;குத் தகுதிபெற முடியவில்லை.

இதனிடையே, கடந்த மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியிலும் ஆண்களுக்கான 200 மீட்டரில் மொஹமட் சபான் முதலிடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரவிந்தனுக்கு மூன்றாமிடம்

இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையக வீரரான சி. அரவிந்தன் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். போட்டியை அவர் ஒரு நிமிடங்கள் 53.58 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் அவர் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் அவருக்கு 7ஆவது இடத்iயே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதேவேளை, ஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியின் முதல் நாளான நேற்றைய தினம் (11) ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீரர் புவிதரன் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் மொஹமட் நிப்ராஸ் இரண்டாவது இடத்தையும், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் மொஹமட் சபான் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<