T20I போட்டிகளில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ள ICC

1167

ஆடவர், மகளிர் என அனைத்துவகை T20I போட்டிகளிலும் புதிய விதிமுறைகள் இரண்டு இந்த மாதத்தில் இருந்து அமுலுக்கு வருவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) குறிப்பிட்டுள்ளது.

சசெக்ஸ் கழகத்தில் இணையும் இலங்கையின் முன்னாள் பயிற்றுநர்

அந்தவகையில் புதிய விதிமுறைகளில் முதல் விதிமுறையாக T20I போட்டிகள் நடைபெறும் போதே மந்தகதியில் ஓவர்கள் வீசும் அணிக்கு தண்டனை வழங்கும் முறையானது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த தண்டனை வழங்கும் முறையில் களத்தடுப்பில் ஈடுபடும் அணியானது, ஒரு இன்னிங்ஸிற்காக ஒதுக்கப்பட்ட நேர அவகாசத்திற்குள் குறித்த இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தினை வீசும் ஒரு நிலையில் காணப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எனினும், களத்தடுப்பில் ஈடுபடும் அணி அவ்வாறான நிலை ஒன்றில் இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில், அந்த அணிக்கு  இன்னிங்ஸின் ஓவர்கள் நிறைவடையும் வரை மைதானத்தின் 30 மீட்டர் சுற்று வட்டத்திற்கு வெளியே ஒரு களத்தடுப்பாளரை குறைவாக வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைமை இனி தண்டனையாக இருக்கும்.

அதேநேரம் இந்த தண்டனை, மந்த கதியில் ஓவர்களை வீசும் போது வழங்கப்படும் ஏனைய தண்டனைகளுக்கு மேலதிகமான ஒன்று எனவும் ICC குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த தண்டனை முறைமை, இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான “த ஹன்ட்ரட்” தொடரின் பெறுபேறுகளில் இருந்து ICC இன் கிரிக்கெட் குழு வழங்கிய பரிந்துரைக்கு அமைய உருவாக்கப்பட்ட ஒன்று எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

‘மஹேல இணைவது எமக்கு கூடுதல் பலம்’ – அவிஷ்க

இதேநேரம் ICC இனால் அமுலுக்கு கொண்டு வரப்படும் இரண்டாவது புதிய விதிமுறையில் T20I போட்டிகளின் இன்னிங்ஸ்களில் நடுவே, சிறு இடைவேளை ஒன்று வழங்கப்படுவது குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்த இடைவேளை கிட்டத்தட்ட 2 நிமிடம் 30 செக்கன்கள் வரை நீடிப்பதோடு, இந்த இடைவேளை தொடர்பில் போட்டிகளில் பங்கெடுக்கும் இரு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் தீர்மானம் மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறை 2021ஆம் ஆண்டில் நடைபெற்று முடிந்த ஆடவர் T20I உலகக் கிண்ணத்தொடரில் பின்பற்றப்பட்டிருந்தமையை கண்டு கொள்ள முடியுமாக இருந்தது.

இந்த புதிய விதிமுறைகள் முதல் முறையாக இம்மாதம் 16ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள்  மற்றும் அயர்லாந்து அணிகள் இடையில் நடைபெறவுள்ள ஆடவர் T20I போட்டியின் போதும், அதனை தொடர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் – தென்னாபிரிக்க மகளிர் அணிகள் பங்கெடுக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் போட்டியிலும் பின்பற்றப்படும் என ICC வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<