2022இல் குவைத்தில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு விசேட தகுதிகாண் போட்டிகளை நடத்த இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த தொடருக்கான முதலாவது தகுதிகாண் போட்டிகள் அடுத்த மாதம் 13, 14 ஆகிய திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இந்த தகுதிகாண் போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில போட்டிகளை மாத்திரம் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஆசிய இளையோர் மெய்வல்லுனர் தொடரை இலக்காகக் கொண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள தகுதிகாண் போட்டிகளுக்கான விதிமுறைகளும், அதற்கான அடைவுமட்டங்களும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 2005 மற்றும் 2006 ஆகிய வருடங்களில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் இந்த தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்ற முடியும் என்பதுடன், 2019 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதயில் அவர்கள் வெளிப்படுத்திய திறமைகள் இந்த தகுதிகாண் போட்டிகளுக்கான விசேட தகைமையாகக் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கனிஷ்ட மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் ஜுலையில்
- 2021-2022 இற்கான மெய்வல்லுனர் அட்டவணை வெளியீடு
- இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஏன் வட, கிழக்கு வீரர்கள் இல்லை?
ஏனவே, இதில் பங்குபற்ற விரும்புகின்ற வீரர்கள் இம்மாதம் 15ஆம் திகதி முதல் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் வெளியிடப்படுகின்ற விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, விண்ணப்பப்படிவத்துடன், வீரர்கள் தாம் பங்குபற்றவுள்ள போட்டிக்கான திறமையை உறுதிப்படுத்தும் வகையில் அதற்கான
சான்றிதழை அல்லது கடிதத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தகுதிகாண் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள், அடுத்த வருடம் மார்ச் மாதம் குவைத்தில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போட்டிகளும், அதற்கான அடைவுமட்டங்களும் பின்வருமாறு:
போட்டி ஆண்கள் பெண்கள்
- 100m. 11.40 13.00
- 200m. 23.30 26.40
- 400m. 51.50 60.00
- 800m. 2:01.00 2:22.00
- 3000 m. 9.25.00 11.00.00
- 100m /110m Hur. 15.60 15.80
- 400m Hurdles 57.50 65.00
- 2000 m. Steeplechase 6.55.00 7.45.00
- High Jump 1.82 1.55
- Long Jump 6.60 5.35
- Triple Jump 13.80 11.40
- Javelin Throw 56.00 36.00
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<




















