IPL ஏலத்தில் விலைபோகாத இலங்கை வீரர்கள்

IPL 2021 Player Auction

1874
IPLT20

இந்தியாவின் சென்னையில் நேற்று (18) நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணி சார்பாக பங்கேற்ற வீரர்கள் எவரும், எந்த அணிக்காகவும் ஏலத்தில் வாங்கப்படவில்லை.

இலங்கை அணி சார்பாக 9 வீரர்கள் ஏலத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்த போதும், திசர பெரேரா மற்றும் குசல் பெரேரா ஆகியோரின் பெயர்கள் மாத்திரமே வாசிக்கப்பட்டது. எனினும், எந்த அணிகளும் இவர்களை தங்களுடைய அணியில் இணைப்பதற்கு விருப்பம் காட்டவில்லை.

>>இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் உமேஷ் யாதவ்

குறிப்பாக இலங்கை அணிசார்பாக விஜயகாந்த் வியாஸ்காந்த், குசல் பெரேரா, திசர பேரேரா, கெவின் கொத்திகொட, மஹீஸ் தீக்ஷன, தசுன் ஷானக, இசுரு உதான, வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். ஏலத்துக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

இலங்கை வீரர்கள் தெரிவுசெய்யப்படாத போதும், சர்வதேசத்தில் உள்ள முன்னணி வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டனர். குறிப்பாக தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் க்ரிஸ் மொரிஸ், அதிகட்பசமாக 16.25 கோடி இந்திய ரூபாய்க்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிகூடிய தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார். இதற்கு முதல் கடந்த 2015ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 16 கோடி ருபாய்க்கு யுt;ராஜ் சிங்கை தங்களது அணியில் இணைத்திருந்தது.

க்ரிஸ் மொரிஸிற்கு அடுத்தப்படியாக நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கெயல் ஜெமிசன் 15 கோடி ரூபாய்க்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இணைக்கப்பட்டார். இவர்களுடன், பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட க்ளென் மெக்ஸ்வேலை 14.25 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியதுடன், அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜெய் ரிச்சட்சனை 14 கோடிக்கு, பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.

கர்னாடகாவைச் சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் கே. கௌதம், தேசிய அணியில் அறிமுகமாகாமல், அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். இவரை 9.25 கோடிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியதுடன், வெளிநாட்டு புதுமுக வீரரான அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ரெய்லி மெரிடித் 8 கோடி ரூபாய்க்கு, பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.

அத்துடன், இம்முறை ஐ.பி.எல். தொடருக்கு முன்னர் அதிகமாக பேசப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமுக வீரர் ஷாருக் கானுக்கு, 20 இலட்சம் குறைந்தபட்ச தொகையாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், 5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டிருந்தார்.

ஐ.பி.எல். ஏலம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் திகதிகளை, இந்திய கிரிக்கெட் சபை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<