உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவர் பொறுப்பு யாருக்கு?

1432

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு இன்னும் 50 இற்கு குறைவான நாட்களே இன்னும் எஞ்சியிருக்கின்றன. இப்படியான ஒரு நிலையில், உலகக் கிண்ணத்தின் போது இலங்கை அணியினை வழிநடாத்தப்போவது யார் என்பது இன்னும் உறுதியில்லாமல் காணப்படுகின்றது.

கிரிக்கெட் விளையாட்டின் உச்சகட்ட மோதல்களில் ஒன்றான உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள பெரும்பாலான அணிகளின் தலைவர்கள் யார்? என்பது பொதுவாகவே தெரிந்த விடயமாக இருக்கின்றது.  எனினும், இலங்கை அணி கடந்த இரண்டு வருடங்களுக்குள் அடிக்கடி தனது தலைவர்களை மாற்றுவதன் காரணமாக உலகக் கிண்ணத்தில் இலங்கையின் தலைமை பொறுப்பினை ஏற்கப்போவது யார் என்பது தற்போது புரியாத புதிராக மாறியிருக்கின்றது.

ThePapare.com இன் உலகக் கிண்ண உத்தேச இலங்கை அணி

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி ….

இந்நிலையில், உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணிக் குழாம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவிருக்கின்றது. இந்த உலகக் கிண்ண குழாத்தோடு, இலங்கை அணியின் தலைவராக செயற்படும் வீரரை தெரிவு செய்ய மூன்று வீரர்களின் பெயர்கள் இலங்கை அணியின் சிரேஷ்ட தேர்வாளரான அசந்த டி மெல்லின் தலைமையில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது. எனினும், தேர்வாளர்களின் கருத்துப்படி உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தினை தெரிவு செய்த பின்னர் அதிலிருந்து பொருத்தமான வீரர் ஒருவருக்கே, அணித்தலைவர் பொறுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ஒரு நாள் அணியின் தற்போதைய தலைவரான லசித் மாலிங்க, குறித்த பொறுப்பை ஏற்ற பின்னர் இதுவரையில் எந்த ஒரு நாள் போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெறாத காரணத்தினால் அவருக்கு இலங்கை அணியின் தலைவர் பதவியினை உலகக் கிண்ணத் தொடரின் போது கொடுப்பது சந்தேகமாகவிருக்கின்றது. இதேநேரம், லசித் மாலிங்க அணித்தலைவராக விளையாடிய போட்டிகளில் இலங்கை அணி வீரர்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்ற வதந்திகளும் பரவிவருகின்றன.

நிலைமைகள் இவ்வாறு இருந்த போதிலும் லசித் மாலிங்கவின் தலைமைத்துவ ஆற்றல்களை யாரும் மறுக்க முடியாது. தற்போது உலகில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் சாமர்த்தியமான ஒருவராக கருதப்படும் மாலிங்க (2014) டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடாத்தி வெற்றிக் கிண்ணம் பெற்றுத்தந்தது போல இந்த ஆண்டிலும் பெற்றுத்தரக்கூடிய திறமையை வைத்திருக்கின்றார். ஆனால், இலங்கை அணியின் தேர்வாளர்கள் மாலிங்கவிற்கு வழிவிடுவார்களோ?  தெரியாது.

ஒருவேளை மாலிங்கவிற்கு உலகக் கிண்ணத்தின் போது அணித்தலைவர் பதவி கொடுக்கப்படாது போனாலும் பந்துவீச்சாளராக அவர் இலங்கை அணியினை பலப்படுத்தும் முக்கிய வீரர்களில் ஒருவராக இருப்பார். எனவே, லசித் மாலிங்கவின் சேவை உலகக் கிண்ணத்தின் போது இலங்கை அணிக்கு கட்டாயம் கிடைக்க வேண்டிய ஒன்றாகும். இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக்கள் எதற்கும் இடம் இல்லை.

இதேநேரம், கடந்த வாரங்களில் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராக செயற்படப்போகின்றவர் திமுத் கருணாரத்னதான் என்ற கருத்துக்களும் பேசப்பட்டு வருகின்றது.  2015ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் ஒரு நாள் போட்டிகள் எதிலும் விளையாடாத திமுத் கருணாரத்ன, இலங்கை அணி தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை பெறுவதற்கு உதவி தனது தலைமைத்துவ ஆற்றலை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன, உலகக் கிண்ணம் நடைபெறப்போகும் காலப்பகுதியில் இங்கிலாந்தின் கவுன்டி அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும் இலங்கையின் ஒரு நாள் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவரின் தேவை கருதியும், தலைவர் ஒருவரின் தேவை கருதியும் குறித்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார்.

உலகக் கிண்ண வீரர்கள் குழாத்தினை அணிகள் எப்போது அறிவிக்கும்?

அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கான….

இத்தோடு, உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி வீரர்களை தெரிவு செய்யும் நோக்கோடு தற்போது நடாத்தப்பட்ட மாகாணத் தொடரில் பங்கேற்ற திமுத் கருணாரத்ன, குறித்த தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாத்தில் தனது இடத்தினை உறுதி செய்திருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த நான்கு வருடங்களில் ஒரு நாள் போட்டிகள் எதிலும் விளையாடாத வீரர் ஒருவருக்கு அணித்தலைவர் பதவியினை வழங்குவது சரியான முடிவா என்ற கேள்வியும் மறுமுனையில் எழுகின்றது.

ஆனாலும், தேர்வாளர்கள் அண்மைக்காலமாக ஜொலிக்க தவறிவரும் இலங்கை அணிக்கு கருணாரத்னவை தலைமைப் பொறுப்பாக்கி உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள இங்கிலாந்து மண்ணில் மாயஜாலம் ஒன்றினை செய்ய எதிர்பார்க்கவும் முடியும்.

இலங்கை அணியின் தலைவர் பொறுப்பிற்கு இறுதியாக பரிந்துரைக்கப்படும் வீரராக அஞ்செலோ மெதிவ்ஸ் உள்ளார். இலங்கை அணியினை கடைசியாக இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் வழிநடாத்திய அஞ்செலோ மெதிவ்ஸ், தொடர்ச்சியான உபாதைகளை சந்தித்த காரணத்தினால் அவர் உலகக் கிண்ணத்தில் அணித்தலைவராக மாறவிட்டாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கும் போதிய உடற்தகுதியுடன் இருப்பதே இலங்கை அணிக்கு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய வரிசையில் களமிறங்கும் மெதிவ்ஸ் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்களை தெரிவு செய்யும் நோக்குடன் நடாத்தப்பட்ட மாகாண தொடரிலும் நல்ல பதிவுகளை காட்டியிருக்கின்றார்.

மெதிவ்ஸ் பற்றி இலங்கை அணியின் தேர்வாளர்கள் கருத்து வெளியிடும் போது அவர் அனைவராலும் ஏற்கப்படும் ஒருவராக உள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அதேநேரம் கடந்த ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி அடைந்த படுதோல்வியினை அடுத்து, இலங்கை அணியின் தலைவர் பதவியினை ராஜினமா செய்த அஞ்செலோ மெதிவ்ஸ் இந்த தோல்வி வடுக்களை ஒதுக்கிவிட்டு, இலங்கை அணியின்  தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்கவுடன் இணைந்து உலக கிண்ணத்திற்கான சரியான திட்டங்களை தீட்ட சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றது.

தலைமை கிடைக்காவிட்டால் உலகக் கிண்ணத்திற்கு முன் ஓய்வுபெற தயாராகும் மாலிங்க

எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து….

மெதிவ்ஸின் தலைமையிலான இலங்கை அணி கடைசியாக நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் காலிறுதிப் போட்டியோடு வெளியேறிய போதிலும், ஒருநாள் போட்டிகளில் அவர் தனிநபராக தனது பங்களிப்புக்களை தொடர்ந்து வழங்கி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், மெதிவ்ஸிற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் இலங்கையின் ஏனைய வீரர்கள் போதியளவான ஆட்டத்தினை வழங்க தவறியது கவலைதரும் விடயமாகும்.

இந்த மூன்று வீரர்களை ஒரு புறம் வைத்து பார்த்தால், இலங்கை அணி தமது கடைசி ஒருநாள் வெற்றியினை 2018ஆம் ஆண்டில் தினேஷ் சந்திமாலின் தலைமையிலேயே பதிவு செய்திருந்தது.

இறுதியாக, இலங்கை அணிக்கு யார் தலைவராகிய போதிலும், அவர் இங்கிலாந்தில் நடைபெறப்போகும் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியினை அரையிறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்ல அதிகமான முயற்சிகளை செய்ய வேண்டி இருப்பதோடு, ஆழ்ந்த சிந்தனைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே உண்மை.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராக யார் வரவேண்டும்? என நீங்கள் நினைக்கின்றீர்கள். அதற்கான காரணங்கள் என்ன? என்பவற்றை கீழே பதிவிடுங்கள்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<