சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவற்றுக்கு இடையே இடம்பெற்று முடிந்திருக்கும் உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை A அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து A அணி, இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரினை நிறைவு செய்த பின்னர், ஐந்து போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் ஆடுகின்றது.
பயிற்சிப் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை சோதித்த ஆஸி.
அதன்படி, உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று (19) அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து A அணித்தலைவர் ஹர்ரி டெக்டர் இலங்கை A அணி வீரர்களை துடுப்பாடுமாறு பணித்திருந்தார்.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை A அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் வந்த அவிஷ்க பெர்னாந்து அதிரடி சதம் ஒன்றினை பெற்றுத்தந்தார். மொத்தமாக 120 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவிஷ்க 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 128 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தேசிய அணி வீரரும் இலங்கை A அணியின் தலைவருவமான உபுல் தரங்க அரைச்சதம் ஒன்றினை பெற்றுத்தந்தார். தரங்கவை அடுத்து, மற்றுமொரு தேசிய அணி வீரரான மிலிந்த சிறிவர்தனவும் இன்னுமொரு அதிரடி சதத்தினை பெற்றுத்தந்தார்.
இம்மூன்று வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை A அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இமாலய 365 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் தாண்டிய உபுல் தரங்க 66 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் நின்று சதம் பெற்ற மிலிந்த சிறிவர்தன 75 பந்துகளில் 11 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 111 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.
இதேநேரம் அயர்லாந்து A அணியின் பந்துவீச்சில் பீட்டர் சேஸ் மற்றும் ஸ்டுவார்ட் தொம்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட மிகவும் கடினமான 366 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து A அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 305 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டத்தில் லோர்கன் டக்கர் சதம் ஒன்றுடன் 86 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 13 பெளண்டரிகள் அடங்கலாக 109 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, ஜேம்ஸ் ஷன்னோன் 67 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரலிருந்து விலகும் ஜோஸ் ஹேசல்வூட்
மறுமுனையில் இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் இஷான் ஜயரட்ன 3 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாந்து மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றிக்கு வித்திட்டிருந்தனர்.
இவ்வெற்றியோடு இலங்கை A அணி உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை A மற்றும் அயர்லாந்து A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
முடிவு – இலங்கை A அணி 60 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<